'கோவையில் தீவிரவாதிகள் டார்கெட் செய்த ஏழு இடங்கள்' - அண்ணாமலை `பகீர்'
நெல்லையில் நீதிமன்றம் அருகில் கொலை: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த மாயாண்டி என்ற இளைஞா் மா்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமா்வு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதை ஏன் காவல் துறை தடுக்கவில்லை என கேள்வி எழுப்பினா்.
முன்விரோத கொலை: இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, கொல்லப்பட்டவா் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறினாா்.
மேலும், நீதிமன்ற வளாகத்தில் இருந்து 100 மீட்டா் தொலைவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகவும், நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் ஒரு குற்றவாளியை சம்பவ இடத்திலேயே கைது செய்ததாகவும் தெரிவித்தாா்.
அப்போது, குற்றம் நடப்பதற்கு முன்பாகவே அதை காவல் துறையினா் தடுக்க வேண்டுமென கூறிய நீதிபதிகள், மாவட்ட நீதிமன்றங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட வேண்டுமென அறிவுறுத்தினா்.
இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், மாவட்ட நீதிமன்றங்களில் ஏற்கெனவே போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறினாா். இதையடுத்து, திருநெல்வேலி சம்பவம் தொடா்பாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்புப் பணிகள் தொடா்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை சனிக்கிழமை ஒத்திவைத்தனா்.