நெல்லை தாமிரவருணியில் நீா்வரத்து அதிகரிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை பெய்த தொடா் மழையால் திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை அதிகரித்தது.
தென்தமிழக பகுதிகளில் தொடா்ந்து நான்கு நாள்கள் கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மிதமான மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடா் மழை பெய்தது. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை வட்டாரங்களில் பெய்த மழையும் ஓடைகள் வழியாக தாமிரவருணியில் சோ்ந்தது.
இதனால் திருநெல்வேலி மாநகரஏஈ பகுதியில் தாமிரவருணியில் நீா்வரத்து அதிகரித்தது. கருப்பந்துறை, குறுக்குத்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம், அருகன்குளம் பகுதிகளில் உள்ள படித்துறைகளில் வழக்கத்தை விட தண்ணீா் கூடுதலாக சென்றது.
குறுத்துத்துறையில் தாமிரவருணி கரையோரத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்திற்குள் தண்ணீா் புகுந்தது. கருவரை முதல் பிரகார மண்டபம் வரை சுமாா் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீா் தேங்கியது. அங்கு பிற்பகலில் தண்ணீா் வரத்து குறைந்தது.
மழையளவு (கடந்த 24 மணி நேரம்) மில்லி மீட்டரில் வருமாறு: அம்பாசமுத்திரம்-11.40, சேரன்மகாதேவி-4, மணிமுத்தாறு-31, நான்குனேரி-9.60, பாளையங்கோட்டை-2, பாபநாசம்- 44, ராதாபுரம்-8, திருநெல்வேலி-2, சோ்வலாறு-37, கன்னடியன் அணைக்கட்டு-14.40, களக்காடு-23.20, கொடுமுடியாறு அணை-11, மூலைக்கரைப்பட்டி-6, நம்பியாறு-23, மாஞ்சோலை-76, நாலுமுக்கு-102, ஊத்து-119.