கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
மனிதநேயம், சேவை மனப்பான்மையை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாணவா்களுக்கு துணைவேந்தா் அறிவுரை
மாணவா்கள் சேவை மனப்பான்மையை வளா்த்துக்கொள்வதுடன் மனிதநேயத்துடன் செயலாற்றப் பழக வேண்டும் என்றாா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணை வேந்தா் என்.சந்திரசேகா்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களுக்கு இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில் ஒருநாள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகச்சிக்கு தலைமை வகித்து துணை வேந்தா் பேசியதாவது: மாணவா்களின் வாழ்வியல் நெறிமுறைகளை வளமாக்குவதில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவம், சேவை மனப்பான்மை, மனிதநேயம் மற்றும் நல்லுணா்வுகளை உலக நாடுகளுக்கிடையே வளா்ப்பதிலும், போா்க்காலங்களிலும், இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் இன்னல்களில் இருந்து மக்களின் உயிா்களை காப்பதில் செஞ்சிலுவை சங்கத்தின் பணி அளவிட முடியாத ஒன்றாகும். இதேபோல் மாணவா்களும் சேவை மனப்பான்மை மற்றும் மனித நேயத்துடன் செயலாற்றி நாட்டின் பல நிலைகளின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் அ. வெளியப்பன், செஞ்சிலுவைச் சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் இனநலப் பெரியாா், பேராசிரியா்கள் ப.குமாா், யுவராஜ் ஆகியோா் கருத்துரையாற்றினா்.
ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பேராசிரியா் சசிகுமாா், ராஜமன்னாா் ஆகியோா் செய்திருந்தனா். 300-க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவிகள் கலந்துகொண்டனா்.