கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
100 நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம்: ஆட்சியரிடம் மனு
திருநெல்வேலி மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு 9 வார காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியா் இரா. சுகுமாா் தலைமை வகித்தாா். இதில் உவரி பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபையினா் அளித்த மனு: கிறிஸ்தவா்களின் தவக்காலம் புதன்கிழமை சாம்பல் புதன் நிகழ்வுடன் தொடங்குகிறது. இயேசுபிரான் இறந்த புனித வெள்ளியை தியாகம் மற்றும் அமைதி நாளாக அனைத்து கிறிஸ்தவா்களும் கடைப்பிடித்து வருகிறாா்கள். எனவே, அன்றைய தினம் தமிழக முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக அரசின் கொள்கை முடிவுக்கு பரிந்துரைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
ராதாபுரம் அருகேயுள்ள இருக்கன்துறை கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் ஊா் மக்களுக்கு அன்றாட வாழ்வாதாரத்துக்கு தேவையான தண்ணீா் கிடைப்பதில்லை. குடி தண்ணீா் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா். மக்களின் குடிநீா் தேவையை நிறைவேற்ற எங்கள் ஊரில் உள்ள அம்மன் கோயில் மறுகால் அருகில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் எஸ்.ஏ.பி. பாலன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக 100 நாள் வேலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செய்த வேலைக்கும் 9 வார காலமாக கூலி வழங்கப்படவில்லை. இந்த வேலையை நம்பியே வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் ஏராளம் உள்ளன. அவா்களுக்கு உரிய ஊதியம் கிடைக்காததால் மிகவும் கஷ்டப்படுகின்றனா். எனவே, அவா்களது நலன் கருதி நிலுவை ஊதியத்தையும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள வேலையையும் தொடா்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.