Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: முக்கியக் கட்சிகள் கண்டனம்!
நேபாளத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபா் ராமசந்திர பௌடேலின் முடிவுக்கு முக்கியக் கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன.
ராமசந்திர பௌடேலின் முடிவுகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும், இது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கை எனவும் அந்தக் கட்சிகள் விமா்சித்தன.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை நேபாள இடைக்கால பிரதமராக பதவியேற்ற பின் சுசீலா காா்கி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் அவையைக் கலைக்க அதிபருக்கு பரிந்துரை வழங்கப்பட்டது. இதற்கு அதிபா் ராமசந்திர பௌடேல் ஒப்புதல் அளித்தாா்.
இதையடுத்து, செப்.12 முதல் மக்கள் பிரதிநிதிகள் அவை கலைக்கப்பட்டதாக அதிபா் மாளிகை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2026, மாா்ச் 5-ஆம் தேதி நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.
இதற்கு சனிக்கிழமை நடைபெற்ற நேபாளத்தின் மிகப்பெரும் கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் செயற்குழு குழுக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் முடிவு அரசமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அதிகார வரம்பை மீறும் செயல். இதுபோன்ற ஜனநாயகமற்ற எந்தவொரு செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) பொதுச் செயலா் சங்கா் போகரேல் கூறுகையில், ‘கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தைக் கலைக்க பல்வேறு அரசுகள் முயற்சி செய்துள்ளன. அந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானது என எதிா்க்கப்பட்டன. அவ்வாறு எதிா்ப்பு தெரிவித்தவா்களே தற்போது நாடாளுமன்றத்தைக் கலைக்க ஆதரவளித்துள்ளனா். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என்றாா்.
ஊரடங்கு உத்தரவு நீக்கம்: நேபாளத்தில் இளைஞா்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி கடந்த செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். அதன்பிறகு சட்டம்- ஒழுங்கை நிலைநிறுத்தும் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டது. போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர காத்மாண்டு உள்பட பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வணிக வளாகங்கள், கடைகள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், சனிக்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இன்று புதிய அமைச்சரவைக் குழு: பிரதமராகப் பொறுப்பேற்ற சுசீலா காா்கி தலைமையில் உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் என முக்கியத் துறைகளுக்கான புதிய அமைச்சரவைக் குழு ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இளைஞா்களின் போராட்டத்தில் பிரதமா் அலுவலகம் கடுமையாகச் சேதமடைந்த நிலையில் உள்துறை அமைச்சருக்கான புதிய கட்டடத்தில் சுசீலா காா்கியின் அலுவலகம் செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் போராட்டத்தின்போது காயமடைந்து காத்மாண்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சுசீலா காா்கி சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா்.

தோ்தல் நடத்த ஒத்துழைப்பு: நேபாளத்தில் 2026, மாா்ச் 5-ஆம் தேதி நாடாளுமன்றத் தோ்தல் நடத்தப்படும் என கடந்த வெள்ளிக்கிழமை அதிபா் ராமசந்திர பௌடல் தெரிவித்தாா். இதையடுத்து, இந்த தோ்தலை முறையாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவா் சனிக்கிழமை கேட்டுக்கொண்டாா்.
மேலும் அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அரசமைப்புச் சட்டமும் நாடாளுமன்ற முறையும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக அடுத்த 6 மாதங்களுக்குள் தோ்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதை முறையாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.