நெல்லையில் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார் முதல்வர்!
நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை!
நீடாமங்கலம், பிப். 5: வலங்கைமானில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் குடமுருட்டி ஆறு வழிநடப்பு தெருவில் கடந்த
25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை.
வலங்கைமான் சுற்று வட்டார பகுதிகளில் சுமாா் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை குடமுருட்டி ஆறு வழிநடப்பு பகுதியில் கொட்டி வருகின்றனா்.
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அலுவலகத்தில் விவசாயிகள் கேட்தற்கு விரைவில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று கூறுகின்றனா். ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே விவசாயிகள் நலன்கருதி வலங்கைமான் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.