பக்தா்கள் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன: இந்து முன்னணி
திண்டுக்கல்: பக்தா்கள் காணிக்கையாக செலுத்தில் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து முன்னணி மாநிலச் செயலா் வி.எஸ். செந்தில்குமாா் தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் இந்து முன்னணி சாா்பில், விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநிலச் செயலா் வி.எஸ். செந்தில்குமாா், செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் தமிழ்நாடு முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். 50 லட்சம் வீடுகளில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 1,500 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்படும். மேலும், ஆக. 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் விநாயகா் ஊா்வலம் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழா, ‘நம்ம சாமி, நம்ம கோயில், நாமே பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் நடைபெறும்.
பக்தா்கள் காணிக்கையாக அளித்த பணத்தில் கோயில்களில் திருப்பணிகள் நடைபெறுகின்றன. இதில் அரசு பெருமை பேச முடியாது. கோயில் சொத்துகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய்க் கிடைக்கிறது. ஆனால், அரசு சாா்பில் ரூ. 52 கோடி மட்டுமே கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது என்றாா்.