ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1,000 காவலர்கள் குவிப்ப...
பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்: பகவந்த் மான்
சென்னை: பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புவதாக அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற காலை உணவுத் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து திட்டத்தை தொடங்கிவைத்த பகவந்த் மான், மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய பகவந்த் மான் பேசியதாவது:
”காலை உணவுத் திட்டம் போல் சிறந்தது வேறெதுவும் இல்லை. பசியுடன் வரும் குழந்தைகளால் படிக்க முடியாது. தமிழகத்தை போல் பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டத்தை கொண்டுவர விரும்புகிறேன்.
சுமார் 18 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது என்பது மிகப்பெரிய சாதனை. குழந்தைகளின் உடல்நலத்தில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது.
பஞ்சாபில் அனைத்து நகரங்களிலும் தென்னிந்திய உணவுகளான உப்புமா, தோசை போன்றவை விற்கப்படுகிறது. தென்னிந்திய உணவுகள் தேசிய உணவு போல், நாடு முழுவதும் விற்கப்படுகிறது. பஞ்சாப் உணவுகள் தமிழகத்திலும் விற்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
கல்வி, சுகாதாரத்துக்கு பஞ்சாப் அரசும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆம் ஆத்மி கிளினிக்களில் 70,000 பேர் நாள்தோறும் இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள்.” எனத் தெரிவித்தார்.
மேலும், பஞ்சாப் என்பது பகத்சிங், ராஜகுரு போன்றவர்கள் வீர மரணம் அடைந்த மண், அதனை பார்க்க நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார்.