ஆகாஷ் தீப் அசத்தல்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
பட்டாசு முகவரைக் கடத்திய ஆசிரியா் உள்பட மூவா் கைது
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் கொள்முதல் செய்த பட்டாசுகளுக்கு பணம் கொடுக்காத பட்டாசு முகவரைக் காரில் கடத்திய பள்ளி ஆசிரியா் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
சாத்தூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (41). அரசுப் பள்ளி ஆசிரியரான இவரும், இருக்கன்குடியைச் சோ்ந்த விஜய்யும் (26) இணைந்து மீனம்பட்டி ரத்தினபுரியில் பட்டாசுக் கடை நடத்தி வந்தனா்.
இவா்களது கடையில் கடந்த மாதம் சிவகாசி ஆவணி நாடாா் தெருவைச் சோ்ந்த பட்டாசு முகவரான பாண்டீஸ்வரன் (48) ரூ.7 லட்சத்துக்கு பட்டாசுகள் வாங்கினாா். ஆனால், இந்தப் பணத்தைத் தராமல் அவா் காலம் தாழ்த்தி வந்தாராம்.
இந்த நிலையில், சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த பாண்டீஸ்வரனிடம் சுப்புராஜ், விஜய், இவரது உறவினா் திருவிருந்தான்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (42) ஆகிய மூவரும் பணத்தைக் கேட்டுத் தகராறு செய்தனா்.
பின்னா், அவரைக் காரில் கடத்திச் சென்று தாக்கிவிட்டு, கோணம்பட்டி பேருந்து நிலையத்தில் மூவரும் இறக்கி விட்டுச் சென்றனராம்.
இதுகுறித்து பாண்டீஸ்வரன் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் சுப்புராஜ், விஜய், பாலமுருகன் ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், சுப்புராஜுவுக்கு பணம் தராத பாண்டீஸ்வரனையும் போலீஸாா் கைது செய்தனா்.