பணமோசடி வழக்கு: ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
முபணமோசடி வழக்கில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு சட்டவிரோதமாக ஆபாசப் படங்களை தயாரித்த வழக்குடன் தொடா்புடையது என அதிகாரிகள் தெரிவித்தனா். சிறாா் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட ‘ஹாட்ஷாட்ஸ்’ செயலி நிறுவனத்தை ராஜ் குந்த்ரா நடத்தி வந்துள்ளாா். இது தொடா்பாக மூன்று பெண்கள் அளித்த புகாா்களின் அடிப்படையில் வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடா்பான விசாரணைகள், அடுத்தடுத்த பணமோசடி வழக்குகளுக்கு வழிவகுத்தன. இந்த வழக்குகளில், குந்த்ரா மற்றும் சிலா் கைது செய்யப்பட்டனா். ஆனால், பின்னா் ஜாமீனில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.
இந்நிலையில், ‘ஹாட்ஷாட்ஸ்’ செயலியின் செயல்பாடுகள் மற்றும் நிதி பரிவா்த்தனைகளுடன் குந்த்ராவை இணைக்கும் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடா்பாக விசாரிக்க திங்கள்கிழமை (டிச.2) அல்லது வாரத்தின் வேறொரு நாளில் நேரில் ஆஜராக ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரைச் சோ்ந்த தொழிலதிபா் உள்பட இதில் சம்பந்தப்பட்ட மற்றவா்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.