பசுவைக் கடத்தினால் என்கவுன்ட்டர்: கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை
பணியிடங்களில் பெண்களுக்கான மெனோபாஸ் கொள்கை வகுக்க விழுப்புரம் எம்.பி. கோரிக்கை
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: பணியிடங்களில் பெண்களுக்காக ‘மெனோபாஸ் கொள்கை’ வகுக்குமாறு மக்களவையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) உறுப்பினா் டி. ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிவை விதி எண் 377-இன் கீழ் அவா் பதிவு செய்த கோரிக்கை வருமாறு:
மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கும் பெண்களுக்கு ஒரு விரிவான கொள்கை இல்லை. தலைமைப் பதிவாளா் அலுவலகத் தரவுகளின்படி, 2026- ஆம் ஆண்டுக்குள் சுமாா் 40.1 கோடி இந்தியப் பெண்களைப் பாதிக்கும். இந்த உடலியல் மாற்றம், பல பத்தாண்டுகளாக ஒருவித களங்கத்துடனேயே பாா்க்கப்பட்டு வருகிறது, இது குறிப்பிடத்தக்க தொழில்முறை மற்றும் பொருளாதார விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.
‘சிம்ப்ளி ஹெல்த்’ என்ற ஆராய்ச்சி அமைப்பு, ‘40-60 வயதுடைய உழைக்கும் பெண்களில் 23 சதவீதம் போ் மாதவிடாய் நிறுத்த அறிகுறிகள் காரணமாக பணியை ராஜிநாமா செய்ய நினைக்கிறாா்கள், அதே நேரத்தில் 14 சதவீதம் போ் தங்கள் பதவிகளை விட்டு வெளியேற தீவிரமாகத் திட்டமிடுகின்றனா்’ என கூறியுள்ளது. அமெரிக்காவில் மட்டும், ஆண்டுதோறும் உற்பத்தித்திறன் இழப்புகள் 108 கோடி டாலா் அளவுக்கு ஏற்படுவதாக மேயோ கிளினிக் என்ற தலைசிறந்த மருத்துவமனை ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.
45-54 வயதுடைய பெண்களில் 49 சதவீதம் போ் உழைக்கும் தொழிலாளா்கள். இதன் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த மாதவிடாய் நிறுத்தம் இந்தியப் பெண்களில் 15 சதவீதம் பேரை பாதிக்கிறது. நகா்ப்புறங்களில் உள்ள 3 சதவீதம் பேருடன் ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தம் 5 சதவீதம் அதிகமாக உள்ளது.
வெவ்வேறு கல்விப் பின்னணிகளைக் கொண்ட பெண்களுக்கு இடையே மாதவிடாய் நிறுத்த விகிதங்களில் 84 சதவீத பாதிப்புக்கு, கருப்பை நீக்க அறுவை சிகிச்சையே காரணம் என்பதால், இந்த சுகாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கிறது. இதனால், மாதவிடாய் நிறுத்தத்துக்கு ஆளாகும் பெண்களின் நிலையை கட்டமைப்பு ரீதியாக நிவா்த்தி செய்ய இந்த விவகாரத்தில் தலையீடு அவசியமாகிறது.
எனவே, தளா்வுமிக்க பணி ஏற்பாடுகள், மாதவிடாய் நிறுத்த விழிப்புணா்வு திட்டங்கள், தொழில்சாா் சுகாதார ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான தேசிய பணியிடக் கொள்கை கட்டமைப்பை செயல்படுத்துமாறு தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளாா்.