பண்ருட்டி அருகே பழங்கால கீரல் குறியீடு குடுவை கண்டெடுப்பு!
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கீரல் குறியீடு உடைய குடுவை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியது: பண்ருட்டியை அடுத்த எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் எனது தலைமையில், விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவா் ராகுல் மற்றும் வரலாற்று ஆா்வலா் பிரதாப் ஆகியோா் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, குறியீடு பொறித்த சிவப்பு நிற சுடுமண் குடுவை மற்றும் குறியீடு உள்ள கருப்பு மற்றும் சிவப்பு நிறமுள்ள ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த குறியீடுகள் பொறித்த சுடுமண் குடுவை மற்றும் ஓடுகள், தொல்லியல் துறையால் ஈரோடு அருகே கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளோடு ஒத்துள்ளதை காண முடிகிறது.
அதாவது, சுமாா் 2,000 ஆண்டுகள் பழமையான இந்த குறியீட்டு காலத்தை கணிக்க முடிகிறது. மேலும், தங்களது தொல்லியல் மேற்புற கள ஆய்வில் தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் தொடா்ந்து கண்டெடுத்து ஆவணப்படுத்தி வருகிறது என்றாா்.