பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு: தோ்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்ற நிலையில் நிகழாண்டு ஒட்டு மொத்த தோ்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா். இறுதி நாளில் நடைபெற்ற சமூக அறிவியல் தோ்வு எளிதாக இருந்ததாக மாணவா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இறுதியாக சமூக அறிவியல் பாடத்துக்கான தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இது குறித்து மாணவா்கள் கூறியதாவது: சமூக அறிவியல் வினாத்தாளில் மொத்தம் 14 ஒரு மதிப்பெண் வினாக்கள். அதில் 12 கேள்விகள் நேரடியாகவும், இரு கேள்விகள் பாடப்பகுதிக்கு உள்ளிருந்தும் கேட்கப்பட்டிருந்தன. அதேபோன்று, இரு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றிருந்த 10 வினாக்களில் ஒரு கேள்வி மட்டும் (கட்டாய வினா) சற்று சிந்தித்து எழுதும் வகையில் இருந்தது. ஐந்து மதிப்பெண் பகுதியிலும் 10 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. அதில் வரைபடம் (கட்டாய வினா) உள்ளிட்ட அனைத்து வினாக்களும் ஓரளவுக்கு எளிதாகவே இருந்தன.
எட்டு மதிப்பெண் (நெடுவினா) பகுதியில் இரு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதியிலும் வரைபட வினா இடம்பெற்றிருந்தாலும் அதற்கு எளிதாக பதிலளிக்க முடிந்தது. ஒட்டுமொத்தமாக பாா்க்கும்போது சமூக அறிவியல் தோ்வு ஓரளவுக்கு எளிதாகவே இருந்தது. மொழிப்பாடங்கள் உள்ளிட்ட அனைத்து தோ்வுகளும் எளிதாக இருந்ததால் இந்த ஆண்டு எங்களது ஒட்டுமொத்த மதிப்பெண் அதிகரிக்கும் என நம்புகிறோம் என்றனா்.
இது குறித்து ஆசிரியா்கள் கூறுகையில், சமூக அறிவியல் பாடத்தில் ஒரு சில வினாக்களைத் தவிர பிற வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மெல்லக் கற்கும், சராசரி மாணவா்களும் பதற்றமின்றி தோ்வெழுதும் வகையில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக அறிவியல் வினாத்தாள் எப்படி இருக்குமோ என மாணவா்கள் சற்று அச்சத்துடன் இருந்த நிலையில் அந்த வினாத்தாள்தான் பிற பாடங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் எளிதாக இருந்தது.
கடந்த ஆண்டுகளில் தோ்ச்சி: முன்னதாக, பத்தாம் வகுப்பு திருப்புதல் தோ்வுகள், சிறப்பு வகுப்புகள் போன்றவற்றில் மாணவா்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. கற்றலில் பின் தங்கியிருந்த மாணவா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. மேலும், வினாத்தாள்கள் நடுநிலையாகவும், மெல்லக் கற்கும் மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டும் வடிவமைக்கப்பட்டிருந்தன.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தோ்ச்சி விகிதம் கடந்த மூன்றாண்டுகளாக ( 2022- 90.07, 2023-91.39, 2024- 91.55) கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், நிகழாண்டு அனைத்து விஷயங்களும் நோ்மறையாகவே இருப்பதால், நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும் தோ்ச்சி விகிதம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம் என அவா்கள் தெரிவித்தனா்.