பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கல்லூரியில் பாராட்டு!
சென்னை: பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானை, சென்னை ஏ.எம் ஜெயின் கல்லூரி கௌரவித்துப் பாராட்டியது.
பறை இசை என்ற தமிழ்நாட்டின் தொன்மையான, பாரம்பரிய கலையை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் சிறப்பான பங்களிப்பிற்காக வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (ஏ.எம் ஜெயின் கல்லூரி) இசைக் கலைஞர் வேலு ஆசானை பாராட்டி கௌரவித்திருக்கிறது.
கல்லூரியின் ஊடகவியல் துறை "பறை ஒலி வழியாக தகவல் பரிமாற்றம் - 25" என்ற தலைப்பில் வேலு ஆசானுடன் ஒரு கலந்துரையாடல் அமர்வையும் ஏற்பாடு செய்திருந்தது.
கல்லூரியின் மாணவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டு இசைக் கலைஞருடன் உரையாடல் நிகழ்த்தினர்.
மாணவர்களிடம் உரையாற்றிய வேலு ஆசான் , 'தற்கால அறிமுக செயல்பாடுகள் காட்சி ஊடக செயல்பாடுகளை கிராஃபிக்ஸ், புகைப்படம், அனிமேஷன் ஆகிய துறைகளுக்குள் பெரும்பாலும் கட்டுப்படுத்தி விடுகின்ற சூழலில், காட்சி வெளிப்பாட்டின் அடித்தளம், நிகழ்த்து கலைகளில் உள்ளது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். நடனம் மற்றும் இசையின் தொன்மையான கலவையான பறை, ஒரு சக்தி வாய்ந்த நினைவூட்டலாக இருக்கிறது. இந்த காட்சி ஊடக தகவல் பரிமாற்றமானது, நிலையான உருவங்களை மீறி, சிக்கலான சிந்தனைகளைத் தெரிவிக்கின்ற, சமூக பிளவுகளை இணைக்கின்ற மற்றும் அனைத்துத் துறைகளிலும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும் ஒரு ஆற்றல்மிக்க மொழியை உள்ளடக்கியது.
நிகழ்த்து கலைகள், கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள் அல்ல; எந்த யுகத்திலும் தகவல் தொடர்புக்கும், பரிமாற்றத்திற்கும் இன்றியமையாத கருவிகள் என்பதை பறை இசையின் நீடித்து நிலைக்கும் ஆற்றலும், அதன் பண்பியல்பும் நிரூபிக்கிறது" என்று கூறினார்.
எங்கள் கல்லூரி எப்போதும் கலாச்சார வெளிப்பாட்டின் பாதுகாவலனாக அதனை தொடர்ந்து ஆதரித்து வருவதாக ஏ.எம் ஜெயின் கல்லூரியின் செயலாளர் உதன் குமார் சோர்டியா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் இணைச் செயலாளர் ஹேமந்த் பி. சோர்டியா, முதல்வர் டாக்டர் பி. மகாவீர் மற்றும் டீன் டாக்டர் எம்.எம். ரம்யா, துணை முதல்வர் டாக்டர். எஸ். அனந்த கிருஷ்ணன், துணை டீன் டாக்டர் சுரேகா, பிரவீன் குமார், காட்சி ஊடகத் தொடர்புத் துறை பேராசிரியர் கவித்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலு ஆசான்
மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூரைச் சேர்ந்த 58 வயதான பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், பாரம்பரிய தாளக் கலையான பறை இசைக்கு அவர் ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது 2025 – ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் அவருக்கு வழங்கப்படவிருப்பதை இந்திய அரசு அறிவித்திருக்கிறது.
இவர் தமிழ்நாட்டின் மிக முக்கியமான பறை இசைக்குழுக்களில் ஒன்றான அலங்காநல்லூர் தப்பிசை குழுவின் நிறுவனர் ஆவார். அவர் 2010 -ல் சமர் என்ற தனது இசைக் குழுவை நிறுவினார். சீனா, அமெரிக்கா, துபாய், இலங்கை மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ்நாட்டின் பறை இசையை சர்வதேச பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார். அவரது மாணவர்கள், இப்போது தமிழ்நாடு முழுவதும் பரவி, தங்கள் சொந்தக் குழுக்களை உருவாக்கி, உலகளவில் பறை இசையின் இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க | தமிழுக்கு முக்கியத்துவம்! தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!