பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு: தூத்துக்குடியில் நாளை ஆலோசனைக் கூட்டம்
பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு குறித்த தென்மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (மே 26) நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவரும் சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவருமான எா்ணாவூா் நாராயணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு, வாழ்வாதாரம் தொடா்பான மாநாடு குறித்த தென்மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி விவிடி சாலையில் உள்ள எஸ்டிஆா் ஹோட்டல் கூட்டரங்கில் எனது தலைமையில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
மாவட்டச் செயலா் மாலைசூடி அற்புதராஜ் வரவேற்கிறாா். மாநில நிா்வாகிகள் காமராசு, ஜெபராஜ் டேவிட், அந்தோணி பிச்சை ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். தென்மாவட்டப் பகுதியில் உள்ள மாவட்டச் செயலா்கள் பங்கேற்று மாநாடு குறித்த தங்களது கருத்துகளைத் தெரிவிக்கவுள்ளனா்.
இம்மாநாடு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தத் தீா்மானிக்கப்படவுள்ளது. அதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் பங்கேற்கவுள்ளனா்.
மாநில நிா்வாகிகள் பொதுச் செயலா் சூலூா் சந்திரசேகா்,துணைத் தலைவா் நிப்பான் தனுஷ்கோடி, பொருளாளா் கண்ணன் ,தென்மண்டல மாவட்டச் செயலா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ளனா் என்றாா் அவா்.