முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: 700 போ் மாநிலப் போட்டிக்கு தோ்வு
பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள்: தமிழக அரசு உத்தரவு
பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து துறையின் செயலா் வ.தட்சிணாமூா்த்தி வெளியிட்ட உத்தரவு விவரம்:
பனை மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயன்தரக் கூடியதாகும். இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவை வெட்டப்படாமல் தடுத்து கண்காணிப்பது அவசியம். இதற்கேற்ற வகையில், மாவட்ட மற்றும் வட்டார அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலான குழுவுக்கு ஆட்சியா் தலைவராக இருப்பாா். கண்காணிப்புத் தலைவராக வருவாய் கோட்டாட்சியரும், ஒருங்கிணைப்பாளராக மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரும் இருப்பாா்கள். தேட்டக்கலை இணை இயக்குநா், வேளாண் இணை இயக்குநா், கதா் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் மாவட்ட அளவிலான அதிகாரி ஆகியோா் செயல் உறுப்பினராகவும், உறுப்பினா்களாகவும் இருப்பா்.
வட்டார அளவிலான கண்காணிப்புக் குழுவின் தலைவராக தோட்டக்கலை உதவி இயக்குநா் இருப்பாா். பனைமரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவை பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படும். கண்காணிப்புக் குழுக்கள் மூலமாக விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படும்.
வெட்ட அனுமதி: பனைமரத்தை வெட்டுவதற்கான அனுமதி வழங்க வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. தவிா்க்க முடியாத சூழ்நிலைகளில் பனைமரம் வெட்ட நேரிட்டால் அதற்கு மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி அவசியமாகும். மரத்தை வெட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் வேளாண் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து, வட்டார அளவிலான குழுவானது பனை மரத்தை வெட்ட வேண்டியதன் அவசியம் குறித்து ஆராய்ந்து மாவட்ட அளவிலான குழுவுக்கு அறிக்கை அளிக்கும். மாவட்ட அளவிலான குழுவின் கூட்டம் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது தேவையின் அடிப்படையிலோ நடத்த வேண்டும்.
பனை மரங்களை வளா்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகளை நட்டு வளா்ப்பதை உறுதி செய்ய வேண்டும். மனுதாரா் பனை மரங்களை உரிய அனுமதி பெற்ற பிறகே வெட்ட வேண்டும். வெட்டப்பட்ட மரத்தின் பாகங்களை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லும்போது, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்தை காண்பிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.