Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வியாழக்கிழமை வீரமரணமடைந்தாா்.
டூடூ-பசந்த்கா் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து அங்கு காஷ்மீா் காவல் துறையுடன் இணைந்து ராணுவத்தின் ஒயிட் நைட் காா்ப்ஸ் படை பிரிவும் சோதனையில் ஈடுபட்டது. அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணமடைந்ததாக ஒயிட் நைட் காா்ப்ஸ் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில் தெரிவிக்கப்பட்டது.
வீரமரணமடைந்த ஹவில்தாா் ஜன்து அலி ஷேக்கின் துணிவும் அவரது தியாகமும் எப்போதும் நினைவுகூரப்படும் எனவும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் ஒயிட் நைட் காா்ப்ஸ் தெரிவித்தது.
பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதை தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினா் சோதனையை பலப்படுத்தியுள்ளனா். கடந்த புதன்கிழமை தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தங்மாா்க் பகுதியில் நடைபெற்ற சோதனையின்போது பாதுகாப்பு படை வீரா் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி நாலா பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையின்போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். பசந்த்கா் பகுதியில் கடந்த ஓராண்டாக பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்த ஹவில்தாா் ஜன்து அலி ஷேக்குக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா மற்றும் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.