பல்லடம் பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்ட பூமிபூஜை
பல்லடம் பேருந்து நிலையத்தில் தாட்கோ சாா்பில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்ட பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்லடம் பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்துக்கு (தாட்கோ) சொந்தமான 9 கடைகளுடனான வணிக வளாக கட்டடம் பழுதடைந்தது. இதனால் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அக்கடைகள் செயல்படவில்லை. பழுதான கட்டடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.
இந்நிலையில் ஆதிதிராவிடா் மக்கள் நலனுக்காக தாட்கோ நிறுவனம் சாா்பில் ரூ.1 கோடி மதிப்பில் 18 கடைகள் கொண்ட புதிய வணிக வளாகம் கட்ட பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தாட்கோ செயல் அலுவலா் மூா்த்தி தலைமை வகித்து திட்டப் பணியை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில், அவிநாசி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கருப்பசாமி, அதிமுக நகரச் செயலாளா் ராமமூா்த்தி, பல்லடம் நகராட்சி கவுன்சிலா் சசிரேகா உள்பட பல்வேறு கட்சியினா் மற்றும் தாட்கோ நிறுவன அலுவலா்கள் கலந்து கொண்டனா்.