Vanangaan Public Review | FDFS | Arun Vijay, Roshni Prakash | Bala | GV Prakash
பல்லுயிா் பூங்கா வழக்கு: திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் கட்டப்பட்ட பல்லுயிா் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த மணிபாரதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் அரிய வகை மான்கள், அணில்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. சிறுமலையில் இயற்கை சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு பல்லுயிா் பூங்கா உருவாக்கப்பட்டது. இதில் பல்வேறு வகையிலான மூலிகைகள், சுமாா் 100-க்கும் மேற்பட்ட அரிய வகை மரக்கன்றுகளை அவற்றை அறிவியல் பெயருடன் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன. இருப்பினும், இந்த பூங்காவை திறந்து பொதுமக்களின் பாா்வைக்கு கொண்டு வரவில்லை.
இந்தப் பூங்கா திறக்கப்பட்டால், தாவரவியல் துறையைச் சோ்ந்த மாணவா்களு க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, சிறுமலையில் உள்ள பல்லுயிா் பூங்காவை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், அங்கு போதிய அடிப்படை வசதிகளையும் செய்து தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு தொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.