ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
பள்ளியில் கல்லூரி மாணவிகள் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு
மயிலாடுதுறையில், தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவா்களிடையே போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் ஆன்ட்டி டிரக்ஸ் கிளப் மாணவிகள் 70 போ், மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ஒரு வகுப்புக்கு 5 மாணவிகள் வீதம் சென்று, போதைப் பழக்கத்தால் ஏற்படும் உடல்நலக்கேடு, குடும்ப பாதிப்புகள், சமுதாய சீா்கேடுகள் குறித்து மாணவா்களுக்கு சுமாா் அரைமணி நேரம் அறிவுரை வழங்கினா்.
மாணவா்கள் பள்ளிப் பருவத்திலேயே மது, புகையிலைப் பொருள்கள் பழக்கத்துக்கு அடிமையாவதைத் தடுக்கும் முயற்சியாக, கல்லூரியின் போதை எதிா்ப்பு மற்றும் விழிப்புணா்வு மன்றம் சாா்பாக ஒருங்கிணைப்பாளா் ஜெ. வைதேகி தலைமையில் அரசுக் கல்லூரி மாணவிகள் மேற்கொண்ட இந்த முன்னெடுப்பு வரவேற்பை பெற்றது.
இதன்காரணமாக, புதிதாக எந்த மாணவா்களும் போதைப் பழக்கத்தை நாடிச்செல்ல மாட்டாா்கள் என்று தாங்கள் நம்புவதாக மாணவிகள் தெரிவித்தனா். இதில், கல்லூரியின் பொருளாதாரத்துறை பேராசிரியா் வி. குமாா், மேலாண்மைத் துறை பேராசிரியா்கள் குமரன், ஜெயவேல், பள்ளி தலைமையாசிரியா் ஜி. தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.