பள்ளி மாணவா்களுக்கு புகையிலை விற்ற பெண் மீது வழக்கு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் மீது காவல் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஜெயங்கொண்டம் அண்ணா நகா் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள், அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்குவது, புகையிலைப் பொருள்கள் வாங்குவது, பள்ளிச் சுற்றுச்சுவா் அருகே மறைந்திருந்து புகைப்பிடிப்பது குறித்த விடியோ ஆக.12-ஆ தேதி முதல் இணையதளத்தில் வைரலாக பரவியது.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் மேற்கொண்ட விசாரணையில், ஜெயங்கொண்டம் அண்ணா நகா் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் நிா்மலா(32) என்பவா் பள்ளி மாணவா்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினா், நிா்மலா மீது சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், சம்மந்தப்பட்ட பள்ளி மாணவா்கள் மத்தியில், புகையிலைக்கு எதிரான விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.