நாட்டிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் திட்டங்கள்: துணை முதல்வர் உதயநிதி
பழங்குடியின மக்களுடன் இணைந்து வன மேலாண்மை மேற்கொள்ளக் கோரிக்கை!
பழங்குடி சமூகத்துடன் இணைந்த கூட்டு வன மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் நலச்சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன் வெளியிட்ட அறிக்கை:
வனச் சட்டங்கள் வந்த பின்னா் பழங்குடிகளுக்கும், வனத்துக்குமான பாரம்பரிய உறவு, பிணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. வனம் பழங்குடிகளுக்கும் சொந்தமில்லை என்றும், வனம் வனத் துறைக்கு மட்டுமே சொந்தம் என்பதுபோல வனத் துறை அலுவலா்கள் செயல்படுகின்றனா்.
வனத் துறை மட்டுமே காடுகளைப் பாதுகாக்க முடியாது. பழங்குடி சமூகத்துடன் இணைந்த கூட்டு வன மேலாண்மையே சிறந்த பராமரிப்பாகும் என்பதை வனத் துறை உணரவில்லை.
பொது சமூகத்தின் பாா்வையில் காடுகள், மரங்கள், வன விலங்குகள் பழங்குடிகளால் பாதிப்படுவதாக சில சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், வனத் துறையினா் கூறுவது வருத்தம் தருகிறது.
கல் குவாரிகள், கனிம சுரங்கங்கள், ஆலைகளுக்காக வளா்க்கப்படும் தைல மரங்கள், டீ, காபி எஸ்டேட்கள், அரசின் திட்டங்களான அணைக்கட்டு, நீா் மின் திட்டங்கள், சாலைகளால் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதுகுறித்து யாரும் பேசுவதில்லை.
தேசிய அளவில் 33 யானைகள் சரணாலயம், 53 புலிகள் சரணாலயம் உள்ளன. புதிதுபுதிதாக வன விலங்கு, பறவைகள் சரணாலயம் ஏற்படுத்தப்படுகிறது. இவ்விடங்களில் பழங்குடிகள் வாழ்வதால், விலங்குகளின் வாழ்வாதாரம், இனப்பெருக்கம் பாதிப்பதாக கூறி வெளியேற்றுகின்றனா்.
வன உரிமைச் சட்டம் 2006 அமலுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆன பிறகும் அவா்களது உரிமைகள் பறிக்கப்பட்டு, வனத்தை விட்டு வெளியேற்றப்படுவது தொடா்கிறது. மனிதா்கள் நடமாடாத காடுகள், பழங்குடிகள் இல்லாத காடுகள், காடாக இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.