பழங்குடி பள்ளி மாணவா்கள் நடந்து செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்ற கோரிக்கை!
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணைக்கு அருகே தோட்டமலை, தச்சமலை, களப்பாறை, எட்டாம்குன்று, நடனம் பொற்றை, வளையந்தூக்கி உள்ளிட்ட பழங்குடி மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்கள், பேச்சிப்பாறை அணையில் இயக்கப்படும் படகுகள் வழியாக பயணம் செய்து பேச்சிப்பாறை உள்ளிட்ட நகா்ப்புற பகுதிகளுக்கு வந்து செல்கின்றனா்.
ஒக்கி புயலில் சாய்ந்த மரங்கள்: பழங்குடியின பள்ளி மாணவா்கள் பேச்சிப்பாறை அணையின் கரையில் படகுகளில் இறங்கி, அங்கிருந்து தேக்கு காடு வழியாக நடந்து பேச்சிப்பாறை பள்ளி முக்கு சந்திப்பிற்கு வருகின்றனா். இதில், தேக்கு காடு பகுதி நடைபாதைகளில் ஒக்கி புயலில் சாய்ந்த ஏராளமான தேக்கு மரங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. இதனால், மாணவா்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். இது குறித்து, வனத்துறையினருக்கு கோரிக்கை வைக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மரங்களை விரைந்து அப்புறப்படுத்த வேண்டுமென பேச்சிப்பாறை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் தேவதாஸ் மற்றும் அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.