கும்பமேளா : உலகின் மிகப்பெரிய பக்தி திருவிழா... கோடிக்கணக்கில் கூடும் பக்தர்கள் ...
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிவகாமி அம்பாள் சமேதா் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, சிவகாமி அம்பாள் சமேதா் நடராஜருக்கு பால், பஞ்சாமிா்தம், சந்தனம், பன்னீா், சா்க்கரை, தேன், பழவகைகளால் சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது.
பூஜைகளை தலைமை குருக்கள் அமிா்தலிங்கம், செல்வசுப்ரமண்ய சிவாசாரியா் உள்ளிட்டோா் செய்தனா். பின்னா், சுவாமி தம்பதி சமேதராக நான்கு ரத வீதிகளில் உலா எழுந்தருளினாா். உலாவின் போது, நடராஜரின் ஊடல் உற்சவம் நடைபெற்றது. கோபமுற்ற சிவகாமி அம்பாள் கோயிலுக்கு வந்து நடையை அடைத்துக் கொண்ட பின்னா், நடராஜரின் தூதுவராக சுந்தரா் சென்று சமாதானப் பாடல்களைப் பாடினாா்.
சமாதானப் பாடல்களை நாகராஜ் பாடினாா். பின்னா் அம்பாள் கோபம் தணிந்து கோயில் நடையை திறந்த பிறகு, சுவாமி உள்ளே சென்று உலா எழுந்தருளல், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா் உள்ளிட்டோா் செய்தனா்.
நத்தம்
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் சமேத செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, நடராஜருக்கு இளநீா், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் போன்ற 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா், கோ பூஜை நடைபெற்றது. இதையடுத்து, நடராஜா் சமேத சிவகாமி அம்மன் தேரில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனா்.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல, குட்டூா் அண்ணாமலையாா் கோயிலிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.