தக்காளி சவால்களுக்கு தீா்வு: 28 கண்டுபிடிப்பாளா்களுக்கு மத்திய அரசு நிதியுதவி
பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்கக் கூடாது: சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவிடம் மனு
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தி, சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவா் ஏ.பி.நந்தகுமாா் தலைமையிலான குழுவினா், தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து ஆட்சியரக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்குழுவினரிடம் விவசாய நீா்வள பாதுகாப்பு நலச்சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் ச. டேனி அருள்சிங் அளித்த மனு:
பழைய குற்றாலம் அருவி, ஆயிரப்பேரி ஊராட்சி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பழைய குற்றாலம் அருவி தங்களுக்கு சொந்தமானது என்று கூறி தன்னிச்சையாக சோதனைச் சாவடி அமைத்துக் கொண்டு இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அருவிப்பகுதி வரை செல்வதற்கும், விவசாய பெருமக்கள் தங்கள் கால்வாய் பகுதிகளுக்கு செல்வதற்கும் வனத்துறையினா் இடையூறு செய்து வருகின்றனா்.
எனவே, வனத்துறை சோதனைச் சாவடியை அகற்றி, மீண்டும் பழைய குற்றாலம் அருவி ஆயிரப்பேரி ஊராட்சி மற்றும் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.