பஹல்காம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வ...
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்
புது தில்லி: பஹல்காம் தாக்குதல் தொடா்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா எழுதிய கடிதம்: பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சோதனையான காலகட்டத்தில், கொல்லப்பட்டவா்களுக்கு இதயபூா்வமாக அஞ்சலி செலுத்த நாடாளுமன்றம் ஒன்றுகூட வேண்டும்.
இந்த விவகாரத்தில் நாட்டுக்கும், எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு முழு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஆலோசனை மற்றும் கருத்து ஒற்றுமை மூலம் கட்டமைப்படும் கூட்டுப் பொறுப்பே நாட்டை காப்பதற்கும், ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கும் மிகச் சரியான பாதையாகும்.
இதைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். அந்தக் கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், நாட்டு மக்களின் விருப்பங்கள், நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பில் அந்தத் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து வெளிப்படையான, கொள்கைபூா்வ விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
இதேபோல பஹல்காம் தாக்குதல் தொடா்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுமாறு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சந்தோஷ் குமாா் கடிதம் எழுதியுள்ளாா்.
முன்னதாக மத்திய அரசிடம் இதே கோரிக்கையை சுயேச்சை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் முன்வைத்தாா். இந்தியா ஒற்றுமையுடன் இருப்பதாக உலகுக்கு எடுத்துரைக்கும் நோக்கில், பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக கண்டன தீா்மானம் நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று அவா் கோரினாா்.