பஹல்காம்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் குழு ஆலோசனை!
பஹல்காம் தாக்குதலையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று(புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்ட சூழல் நிலவி வரும் நிலையில் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. நேற்று(செவ்வாய்க்கிழமை) மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, முன்னதாக பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் முதல் கூட்டம் கடந்த ஏப். 23 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியா வரத் தடை, சிந்து நதிநீா் பகிா்வு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க |'உங்க அன்ப புரிஞ்சுக்குறேன்.. ஆனால்..!' - தவெக தலைவர் விஜய் பதிவு!