பாகிஸ்தான்: மனித வெடிகுண்டுகளாக பயணிகள்! 250 பேரை மீட்பதில் சிக்கல்!
பாகிஸ்தானில் பயங்கராவதிகள் சிறைப்பிடித்துள்ள ரயிலில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 250 பயணிகளை மீட்பதில் சிக்கல் தொடர்ந்து வருகின்றது.
இதுவரை 155 பயணிகளை ரயிலில் இருந்து மீட்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர், 27 பயங்கரவாதிகளை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நடந்தது என்ன?
பலோசிஸ்தான் மாகாணம் குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி 400-க்கும் அதிகமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சிறைபிடித்துள்ளனர்.
சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ், செவ்வாய்க்கிழமைதான் இயக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரயில் குவெட்டாவிலிருந்து பெஷாவர் இடையே சென்றுகொண்டிருந்தபோது, சுரங்கத்துக்குள் நுழைந்துள்ளது. அப்பகுதியில் ரயில் மெதுவாக இயக்கப்படும் என்பதை அறிந்த பயங்கரவாதிகள் தண்டவாளத்தை தகர்த்து ரயிலின் ஓட்டுநரைக் கொன்று சிறைபிடித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஆப்கனைச் சேர்ந்த பலூச் விடுதலை ராணுவத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இதையும் படிக்க : டெஸ்லா காருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்க்! வெள்ளை மாளிகைக்கு புதுவரவு.!
155 பேர் மீட்பு
இந்த ரயிலின் 9 பெட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த நிலையில், அனைத்து பெட்டிகளையும் பயங்கரவாதிகள் சிறைபிடித்துள்ளனர்.
முதல்கட்டமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் சில பெட்டிகளில் இருந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு பயணிகளை மீட்டுள்ளனர்.
இதுவரை 27 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு 155 பயணிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் மீட்டுள்ளனர். அவர்களை மருத்துவ உதவிக்காக அருகிலுள்ள நகரத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இதனிடையே, பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 30 வீரர்களை கொன்றுள்ளதாக பலூச் விடுதலை ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்தவில்லை.
மனித வெடிகுண்டுகள்
மீதமுள்ள பெட்டிகளில் உள்ள 250 பயணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள சில பயணிகளை மனித வெடிகுண்டுகளாக பயங்கரவாதிகள் வைத்துள்ளதாக வெளியான தகவலால் பாகிஸ்தான் ராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், 48 மணிநேரத்துக்குள் பாகிஸ்தான் சிறையில் உள்ள அவர்களது அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
நிறைவேற்ற தவறும் பட்சத்தில் முழு ரயிலையும் வெடிக்கச் செய்வோம் என்று பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெஷாவர் மற்றும் குவெட்டா ரயில் நிலையங்களில் பயணிகளின் குடும்பத்தினர் தொடர்பு கொள்வதற்காக உதவி மையங்களை ராணுவத்தினர் ஏற்படுத்தியுள்ளனர்.