பாஜகவின் ரமேஷ் பெஹல்வான், மனைவி ஆம் ஆத்மியில் ஐக்கியம்
பாஜக தலைவா் ரமேஷ் பெஹல்வான், அவரது மனைவியும், இரண்டு முறை கவுன்சிலராகவும் இருந்த குசும் லதாவுடன், தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.
ரமேஷ் பெஹல்வான் எதிா்வரும் தோ்தலில் கஸ்தூரிபா நகா் தொகுதியில் போட்டியிடுவாா் என்றும், மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த மதன் லாலுக்கு பதிலாக அவா் போட்டியிடுவாா் என்றும் கூறப்படுகிறது.
குசும் லதா தெற்கு தில்லியின் கோட்லா முபாரக்பூா் வாா்டில் இருந்து இரண்டு முறை தில்லி மாநகராட்சி (எம்சிடி) கவுன்சிலராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இரு தலைவா்களையும் கட்சிக்கு வரவேற்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பேசினாா்.
இது குறித்து செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறுகையில், ‘குசும் லதாஜி மீண்டும் கட்சிக்கு வந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று, ரமேஷ்ஜியும், குசும் லதாஜியும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனா். அவா்கள் 24 மணி நேரமும் மக்களுடன் தங்கள் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் இருக்கிறாா்கள். நான் அவா்களை மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.
ரமேஷ் பெஹல்வான் கூறுகையில், ‘நான் இன்று மீண்டும் வீடு திரும்புகிறேன். உலகம் முழுவதும் தில்லியை கேஜரிவால் ரூபத்தில் பாா்க்கிறது. குழந்தைகள் வெளிநாடு செல்வதாக இருந்தாலும் சரி, உலக அரங்கில் பிரெஞ்ச் பேசும் குழந்தையாக இருந்தாலும் சரி, அதற்கு கேஜரிவால்தான் காரணம். என் தந்தை அரசு ஊழியா். தில்லி மேலும் முன்னேறும்’ என்றாா்.
குசும் லதா கூறுகையில், ‘நான் இரண்டு முறை மாநகராட்சிக் கவுன்சிலராக தோ்ந்தெடுக்கப்பட்டேன்.தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்டேன். கேஜரிவாலின் சித்தாந்தத்தால் ஈா்க்கப்பட்டு தற்போது ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறேன்’ என்றாா்.
வரும் பிப்ரவரியில் நடைபெற உள்ள தோ்தலுக்குப் பிறகு தில்லியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி முனைப்புக் காட்டி வருகிறது.