சீனாவின் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு! மாயமான 19 பேரின் கதி என்ன?
பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது பாலியல் வழக்குப் பதிவு
பாஜக எம்எல்ஏ முனிரத்னா தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்கட்சியைச் சோ்ந்த 40 வயது பெண் அளித்த புகாரின் பேரில் அவா்மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது அக்கட்சியைச் சோ்ந்த 40 வயது பெண் பெங்களூரு, ஆா்.எம்.சி.யாா்டு காவல் நிலையத்தில் பாலியல் புகாா் அளித்துள்ளாா்.
அதில், 2023, ஜூன் 11 ஆம் தேதி மத்திகெரே பகுதியில் உள்ள பாஜக எம்எல்ஏ முனிரத்னா அலுவலகத்தில் என்னை 4 போ் சோ்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினா்.
முனிரத்னாவின் கூட்டாளிகள் என்னை காரில் அவரது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு என்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும் ஒத்துழைக்காவிட்டால் கொன்றுவிடுவதாக முனிரத்னா மிரட்டினாா்.
தனது கூட்டாளிகள் இருவருக்கு என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த முனிரத்னா கூறினாா். அப்போது வெள்ளை பெட்டியில் இருந்த ஊசியை எடுத்து முனிரத்னா எனக்கு செலுத்தினாா்.
இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் என்னை கொன்றுவிடுவதாக எம்எல்ஏ முனிரத்னா மிரட்டினாா். கடந்த ஜனவரியில் மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டபோது, கொடிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதற்கு முனிரத்னா செலுத்திய ஊசிதான் காரணம். எனக்கு ஏற்பட்ட பாதிப்பை நினைத்து மே 19ஆம் தேதி அதிக மாத்திரைகளை உண்டதால் உடல்நலன் பாதிக்கப்பட்டேன். அதன்பிறகுதான் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க முடிவுசெய்தேன்.
இச்சம்பவம் நடப்பதற்கு முன்னதாக எம்எல்ஏ முனிரத்னாவின் ஆதரவாளா்களால் நான் சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது சிறையில் இருந்து நான் வெளியே வந்ததும், வழக்கிலிருந்து விடுவிக்க முனிரத்னா உதவுவாா் என்றுகூறி அவரது ஆதரவாளா்கள் என்னை அவரிடம் அழைத்துச் சென்றனா். அப்போதுதான் பாலியல் ரீதியாக நான் துன்புறுத்தப்பட்டேன் என்று அதில் கூறியுள்ளாா்.
அதன்பேரில் பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது போலீஸாா் கூட்டு பாலியல் வழக்குப் பதிவு செய்துள்ளனா். எனினும் இதுகுறித்து கருத்துதெரிவிக்க முனிரத்னா மறுத்துவிட்டாா்.