பாஜக 400 இடங்கள் பெற்றிருந்தால் இடஒதுக்கீடு நீக்கப்பட்டிருக்கும்: தெலங்கானா முதல்வர்!
மக்களவையில் பாஜக 400 இடங்கள் பெற்றிருந்தால் இடஒதுக்கீடானது ரத்து செய்யப்பட்டிருக்கும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
மத்திய அரசை அமைத்துள்ள பாஜக மட்டும் மக்களவத் தேர்தலில் 400 இடங்களை வென்றிருந்தால், நாட்டில் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட்டிருக்கும் என தெலங்கானா முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
இதுகுறித்து, இன்று (மே.1) செய்தியாளர்களுடன் பேசிய அவர், மக்களவையில் 400 இடங்களை வெல்ல வேண்டும் எனும் பாஜக-வின் திட்டத்தை எதிர்க்கட்சிகள் முறியடித்துவிட்டதாகவும், அவ்வாறு அவர்கள் வென்றிருந்தால் தற்போது சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:
”பிகார் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்டோர் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தியதினால் கூட்டணி அரசைப் பாதுகாக்க வேறு வழியின்றி பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு தற்போது அதனை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக, நேற்று வரையில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராகப் பேசி வந்தனர். மேலும், உச்ச நீதிமன்றத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று அவர்கள் பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தனர். ஆனால், தற்போது ஏன் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்கள்? ஏனெனில், நாங்கள் மக்களை எச்சரித்தோம் அதனால் அவர்களுக்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை நம் நாட்டு மக்களுக்கு மிகவும் உதவியளித்துள்ளது. மத்திய அரசை நாங்கள் வலியுறுத்தியதினால் அவர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இத்துடன், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதில் தெலங்கானா ஒரு முன்னோடி மாநிலம் என்று பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாகக் கூறிய அவர், ’நரேந்திர மோடி என்னைப் பின் தொடர்வதினால் உள்ளூர் பாஜக தலைவர்கள் பொறாமைப் படுகிறார்கள்’ என விமர்சித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் ஆலோசனையை பிரதமர் ஏற்றுக்கொண்டது நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறியதுடன் உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கு 50 சதவிகித உச்ச வரம்பை விதிக்கவில்லை எனவும் இடஒதுக்கீட்டை அதிகரிக்க சரியான தரவுகள் இருக்க வேண்டும் என்று மட்டுமே கூறியதாகவும் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.