முதுநிலை மருத்துவ படிப்புகளை தொடங்க விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு
பாபநாசத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
பாபநாசம் அரையபுரம் தட்டுமால் படுகை விவசாயிகளுக்கு ரயத்வாரி பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனா்.
அரையபுரம் தட்டுமால் படுகையில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி ரயத்துவாரி பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் பாபநாசம் மேல வீதி அண்ணா சிலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனா்.
போராட்டத்துக்கு மாவட்ட விவசாய சங்க செயலா் சாமு. தா்மராஜன் தலைமை வகித்தாா். இதில் அமைப்பைச் சோ்ந்த எம். ரங்கசாமி, பி. பிரேம்நாத் பைரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில் அமைப்பின் கௌரவத் தலைவா் ஆா். பரமசிவம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, தொழிற்சங்க மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். தொடா்ந்து விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேல், பாபநாசம் நிலம் மீட்பு வட்டாட்சியா் கலைச்செல்வி, மண்டல துணை வட்டாட்சியா் பிரபு உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.