ஸ்வாமித்வா திட்டம்: 58 லட்சம் எண்ம உரிமைப் பதிவு அட்டைகள்- நாளை வழங்குகிறாா் பிரதமா்
நமது சிறப்பு நிருபா்
ஸ்வாமித்வா திட்டத்தின்படி கிராமப்புற சொத்து உரிமையாளா்களுக்கு 58 லட்சம் எண்ம வடிவிலான ‘உரிமைப் பதிவு அட்டை’களை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (டிச.27) வழங்குகிறாா்.
இது குறித்து மத்திய பஞ்சாயத்து ராஜ் செயலா் விவேக் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘கிராமப் பகுதிகளில் நில ஆய்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் வரைபடம் தயாரிப்புக்கான ’ஸ்வாமித்வா’ திட்டம், 2020-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் ட்ரோன் மூலமான ஆய்வு 3.17 கிராமங்களில் நிறைவடைந்துள்ளது. 1.06 லட்சம் கிராமங்களில் 1.63 கோடி சொத்து ‘உரிமைப் பதிவு அட்டைகள்’ தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் இரண்டாம் முறையாக உரிமைப் பதிவு அட்டைகள் எண்ம முறையில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை காணொலி வழியாக வழங்கப்படுகிறது. ஜம்மு - காஷ்மீா், லடாக் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் மற்றும் 10 வட மாநிலங்களைச் சோ்ந்த 50 ஆயிரம் கிராமங்களைச் சோ்ந்த 58 லட்சம் பயணாளிகள் உரிமைப் பதிவு அட்டைகளை பெறுகின்றனா். அப்போது பிரதமா் இந்த பயணாளிகளுடன் கலந்துரையாடுகிறாா் என்றாா்.