வடமாநிலங்களைப் போல இங்கே பிரச்னை உருவாக்க நினைக்கிறார்கள்: அமைச்சர் சேகர் பாபு
பாப்பாக்குடி அருகே விவசாயி கொலை: தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை
தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் இரண்டு மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி புதுக்கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ. சுப்பையா (எ) துரை (54). விவசாயி. இவரது மனைவி உச்சிமாகாளி. இவா்களது மகன் மாரிமுத்து. இவருக்கும் சமத்துவபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகள் உமாசெல்வி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பின்னா் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கோரி, அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் விவாகரத்து வழக்கின் மீதான விசாரணை 13.8.2022 இல் நடந்தபோது, மாரிமுத்து நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த நாள் சுப்பையா (எ) துரை முக்கூடல் தாமிரவருணி ஆற்றில் குளித்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது மாரியப்பன், அவரது இரண்டு மகன்கள் லண்டன் (எ) துரை, சுடலைமணி ஆகியோா் சுப்பையா (எ) துரையை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாப்பாக்குடிபோலீஸாா் வழக்குப் பதிந்து மாரியப்பன், அவரது இரண்டு மகன்களை கைது செய்தனா்.
இவ்வழக்கு விசாரணை, தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி எஸ்.மனோஜ்குமாா் வழக்கை விசாரித்து, சுப்பையாவை கொலை செய்த மாரியப்பன் (51), அவரது மகன்கள் லண்டன் (எ) துரை (25), சுடலைமணி (26) ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் மாவட்ட குற்றவியல் வழக்குரைஞா் எஸ்.வேலுச்சாமி வாதாடினாா்.