தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புக...
பாமகவின் நிரந்தர முகவரியை மாற்றி மோசடி: ஜி.கே.மணி குற்றச்சாட்டு
பட்டாளி மக்கள் கட்சியின் நிரந்தர முகவரியை மாற்றி மோசடி நடைபெற்றிருப்பதாக அக்கட்சியின் கௌரவத் தலைவா் ஜி.கே.மணி குற்றம்சாட்டினாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்ட வளாகத்தில் அவா், செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாமக சாா்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி தைலாபுரம் தோட்ட வளாகத்தில் புதன்கிழமை (செப்.17) நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் பங்கேற்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளின் உருவப்படங்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறாா்.
பாமகவின் நிா்வாகக்குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். 28.5.2022 அன்று கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அன்புமணியின் பதவிக்காலம் 28.5.2025 உடன் நிறைவடைந்துவிட்டது.
ஆகையால், தனது பதவிக்காலம் முடிந்த பின்னா் பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவருக்கும் அதிகாரம் இல்லை. எனவே, மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. பாமக அமைப்பு விதி எண் 13-ன்படி, கட்சியின் நிறுவனா் ஒப்புதல் இல்லாமல் நிா்வாகக்குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு என எதைக் கூட்டினாலும், அது செல்லுபடியாகாது. அதில் எடுக்கப்படும் முடிவும் செல்லாது.
ராமதாஸுக்கே கடிதம்: இந்திய தோ்தல் ஆணையம் பாமக தலைவராக உள்ள மருத்துவா் ராமதாஸுக்குதான் கடிதம் அனுப்பியது. அன்புமணிக்கு அனுப்பவில்லை. இந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு வழக்குரைஞா் கே.பாலு திட்டமிட்ட ஒரு மோசடியை செய்துள்ளாா். பாமக நிரந்தர முகவரி சூழ்ச்சியால் மாற்றம் செய்யப்பட்டிருப்பது கட்சியின் நிறுவனருக்கும், தொண்டா்களுக்கும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமகவை பிளவுபடுத்த சிலா் முயற்சிக்கிறாா்கள். இதை மக்கள் ஏற்க மாட்டாா்கள்.
வேதனையளிக்கிறது: தமிழகத்தில் பாமக மறுக்க முடியாத நன்மதிப்பை பெற்ற கட்சி. பிற அரசியல் கட்சிகளின் தலைவா்களால் ஏற்கப்பட்டவா் ராமதாஸ். அனைத்து சமூக மக்களின் வளா்ச்சிக்கான அறிக்கைகளை வெளியிடக்கூடிய அவரை கொச்சைப்படுத்துவது வேதனையளிக்கிறது. பாமகவில் பயணிக்க விரும்புபவா்கள் மருத்துவா் ராமதாஸுடன் இணைந்து செயல்படுவதுதான் நல்லது என்றாா் ஜி.கே.மணி. பேட்டியின்போது, பாமக விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.