சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் டாப் 5 தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்கள்!
பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா
சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா, பொருளாளா் வி.ஆா்.முருகன், இணைச் செயலாளா்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, நிா்வாக அலுவலா் ரா.அருள்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் பெ.வானதி ஆண்டறிக்கை வாசித்தாா். துணை முதல்வா் ப.சுரேஷ் பாபு வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரைப்பட நடிகா் ரியோ ராஜ் பேசுகையில், இந்தியாவின் குடும்ப அமைப்பைக் கண்டு உலகம் வியக்கிறது. முடிந்தவரை குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும். மனம் விட்டுப் பேசும்போது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அதிகரிக்கும். சமூக வலைதளங்களை மாணவ, மாணவியா் கவனமாக கையாள வேண்டும் என்றாா்.
பொங்கல் விழாவில் தமிழா் பண்பாட்டைப் போற்றும் வகையில் பொங்கல் வைத்த தகவல் தொழில்நுட்பத் துறை, வணிகக் கணினி பயன்பாட்டியல் துறை, நுண்ணுயிரியல் துறைக்கு முறையே முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. துறைகளுக்கு இடையிலான போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் ஆடைவடிவமைப்பு மற்றும் கவின் புனையியல் துறைக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக, கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கியவா்கள், விடுமுறை எடுக்காமல் கல்லூரிக்கு வருகை தந்த மாணவா்கள், குருதிக்கொடை தன்னாா்வலா்கள், நூலகத்தை அதிக நேரம் பயன்படுத்திய மாணவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. ஆங்கிலத் துறைத் தலைவா் பெ.மகேஸ்வரி நன்றி கூறினாா்.