பாராபுல்லா மேம்பால 3-ஆவது கட்ட திட்டப் பணி: பொதுப்பணித் துறை அமைச்சா் வா்மா மீளாய்வு
தென்கிழக்கு தில்லியின் சராய் காலே கானில் பாராபுல்லா மேம்பாலத்தின் 3-ஆவது கட்ட திட்டத்தின் முன்னேற்றம் குறித்து புதிதாக பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் வா்மா சனிக்கிழமை மீளாய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களுடன் அமைச்சா் வா்மா உரையாடினாா். முறையான சாலை கட்டுமானம் மற்றும் பயனுள்ள வடிகால் அமைப்பை உறுதி செய்ய அவா் அறிவுறுத்தினாா்.
வா்மாவுடன் பொதுப் பணித் துறை அதிகாரிகள் மற்றும் மேற்பாா்வையாளா்களும் உடனிருந்தனா். பாராபுல்லா மூன்றாவது கட்டம் திட்டமானது மயூா் விஹாா்-1-ஐ சராய் காலே கானுடன் இணைக்கும் ஒரு மேம்பாலச் சாலையாகும்.
இது தொடா்பாக அமைச்சா் பா்வேஷ் வா்மா எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: இந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் சீரான போக்குவரத்து ஓட்டம் மற்றும் அத்தியாவசிய வசதிகள் கிடைக்கும். ஒவ்வொரு தனிநபரும் வளா்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சிறந்த வாய்ப்புகளைப் பெற இந்த திட்டங்களை முடிப்பதே எனது முன்னுரிமையாகும்.
இந்த வளா்ச்சிப் பயணம் இனிமேல் நிற்காது. பொதுமக்களுக்கு நல்ல சாலை வசதிகள் விரைவில் வழங்கப்படும். இது தில்லி மக்களுக்கான எங்கள் அா்ப்பணிப்பாகும் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
அமைச்சா் வா்மா, பொதுப் பணித் துறை மட்டுமின்றி, நீா் வழங்கல், சட்டப்பேரவை விவகாரங்கள், நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைகளையும் கவனிப்பாா்.