பாலாவின் எழுச்சியா? வீழ்ச்சியா? வணங்கான் - திரை விமர்சனம்
இயக்குநர் பாலா - அருண் விஜய் கூட்டணியில் உருவான வணங்கான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரியில் வசித்துவரும் அருண் விஜய்க்கு (கோட்டி) ஒரே உறவு தன் தங்கை (ரிதா) மட்டும் என்பதால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பேரன்புடன் உள்ளனர். வேலைக்குச் சென்று தன் தங்கையின் நலனில் மிகுந்த கவனத்துடன் இருப்பவர், சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளைக் கண்டு ஆத்திரப்பட்டு அடிதடியில் இறங்குகிறார். காவல்துறையினரைக்கூட மதிக்காமல் அடிக்கும் அளவிற்கு கோபக்காரராக இருப்பதால் கோட்டியின் நலன் விரும்பிகள் அவரை மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாவலராக வேலைக்குச் சேர்த்துவிடுகின்றனர்.
அங்கு, கண் தெரியாத, மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் சிறார்களிடம் மிக அன்புடன் கோட்டி நடந்துகொள்கிறார். அங்கு, வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே கண் தெரியாத பெண்களுக்கு ஒரு அவலம் நிகழ்கிறது. அதைச் செய்தது யார்? மாற்றுத் திறனாளிகளை நாம் சரியாக நடத்துகிறோமா? என்கிற கேள்விகளுடன் உருவாகியிருக்கிறது வணங்கான்.
இதையும் படிக்க: ஊர்விட்டு ஊர் வந்து... மெட்ராஸ்காரன் - திரை விமர்சனம்!
நாச்சியாருக்குப் பின் திரையரங்குகளில் வெளியாகும் பாலாவின் படமென்பதால் பலருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. நடிகர் சூர்யா இப்படத்திலிருந்து விலகிய பின் அருண் விஜய் இணைந்ததும் இன்னும் காத்திரமான, முழுமையான பாலா படமாக இது இருக்கும் என்றே பலரும் நினைத்தனர்.
அதேபோல், வணங்கானில் முக்கியமான, பேசப்பட வேண்டிய ஒரு பிரச்னையைக் கையில் எடுத்த பாலா, அன்றாடம் நாம் கடந்து செல்லக்கூடிய செய்திகளுக்குப் பின் அதை அனுபவிப்பவர்களுக்கு எவ்வளவு வலி இருக்கிறது என்பதை தன் பாணி சினிமா உருவாக்கத்தில் பேச முயன்றிருக்கிறார்.
ஆனால், இதமான பாடலிலிருந்து படம் ஆரம்பமானாலும் சில நிமிடங்களிலேயே வணங்கான் சோதிக்க ஆரம்பித்துவிட்டது. முதல்பாதியில் ஏதாவது நல்ல காட்சி இருக்கிறதா? எனத் தேட வைக்கிறார். முதல்பாதி முடிவதற்கு முன் படத்தின் முக்கிய காட்சி காட்டப்படுகிறது. அந்தக் காட்சியை பாலா இப்படி காட்டியிருக்கக் கூடாது. பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டும் பாலியல் வன்முறைகளைப் பேசும்போது மிகுந்த கவனமாகக் காட்சிகளை எடுக்க வேண்டாமா? பார்வையாளர்களுக்கு அழுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பாலா போன்றவர்கள் இப்படி யோசிப்பது அவரின் ரசிகர்களுக்கு வருத்தத்தைதான் கொடுக்கிறது.
கதையின் மையம் சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலம்தான் என்றாலும் வெறும் செய்திகளைக் கோர்த்து திரைக்கதையாக்கினால் மட்டும் போதாது. இந்த மாதிரி கதைகள் சினிமாவாக மாறும்போது பார்வையாளர்களிடம் உரையாடலை நிகழ்த்த வேண்டும். ஆனால், குற்றவாளிகள் கொடூரமாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதையே பாலா பதிவு செய்கிறார். காவல்துறையும், நீதிமன்றமும் நியாயத்திற்குக் கொலை செய்தால் கண்டுகொள்ளக்கூடாது என்பது மாதிரியான காட்சிகளும் நெருடலைத் தருகின்றன.
இதையும் படிக்க: இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? கேம் சேஞ்சர் திரை விமர்சனம்!
இரண்டாம் பாதியிலாவது படம் தப்பிக்கும் என நினைத்தால் அங்கும் நிறைய சொதப்பல்கள். பாலாவின் படம்போன்றே தெரியவில்லை. சில இடங்களில் நகைச்சுவைக் காட்சி சிரிக்க வைத்தாலும் வேண்டுமென்றே அழுகையும், ரத்தமும் சிந்தப்பட்டு தேவையில்லாத முடிவாக கிளைமேக்ஸ் காட்சியை எழுதியது என வணங்கான் பல பலவீனங்களால் கடுமையாகத் தடுமாறுகிறது.
நடிகர் அருண் விஜய் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு முடிந்த அளவு நியாயம் சேர்த்திருக்கிறார். ஆக்சன் மற்றும் உணர்வுகளை சைகையால் கடத்த வேண்டிய காட்சிகளில் தன் உடல்மொழியால் கதைக்கு பலமாக இருந்தாலும் இவரின் கதாபாத்திரம் சரியாக எழுதப்படவில்லை.
பெண்கள் பாதுகாப்பில் பெரிய கவனத்துடன் இருக்கும் அருண் விஜய், நாயகி தன்னைக் கிண்டலடித்தார் என்பதற்காக அவரை ரத்தம் வரும் அளவிற்கு அடிப்பது படத்தின் போக்கையே மாற்றுகிறது. நடிப்பிலும் பெரிய மாற்றங்கள் இல்லை. மீண்டும் ஒரு பிதாமகன் கதாபாத்திரத்தைப் பார்ப்பதுபோலவே அருண் விஜய் தெரிகிறார். சமுத்திரக்கனி, மிஷ்கின், ரோஷினி பிரகாஷ் என மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கான வேலையை சரியாகச் செய்திருக்கின்றனர். அருண் விஜய்க்கு தங்கையாக நடித்த ரிதா தனித்து தெரிகிறார். கதாபாத்திரத்தை உள்வாங்கி ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறார்.
ஜி. வி. பிரகாஷ் இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் கேட்க இனிமையாக இருக்கின்றன. சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை சில இடங்களில் அதிர்வைக் கொடுத்தாலும் திணிக்கப்பட்ட ஒன்றாகவே சில காட்சிகளில் தெரிவது பலவீனம். கன்னியாகுமரியின் கடல்புறம், தேவாலயம் என ஒளிப்பதிவாளர் குருதேவின் கோணங்களும் ஒளியமைப்பும் நன்றாக இருந்தன. ஸ்டண்ட் சில்வாவின் சண்டைக்காட்சிகளும் எதார்த்தமாக எடுக்கப்பட்டிருக்கின்றன.
பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த வணங்கான் பாலாவுக்கும் அருண் விஜய்க்கும் தமிழ் சினிமாவுக்கும் திருப்புமுனைப் படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. இயக்குநர் பாலாவுக்குள் அற்புதமான சினிமா மொழி இருக்கிறது. அதை நல்ல கதைக்காக அவர் பயன்படுத்த வேண்டும்.