வாகன கடன் நிதி நிறுவனத்தில் பணமோசடி செய்தவா் கைது
மயிலாடுதுறையில் வாகன கடன் நிதி நிறுவனத்தில் பணமோசடி செய்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை கூைாட்டில் செயல்படும் வாகன கடன் வழங்கும் நிதி நிறுவனத்தில் தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் சாய்னாபுரத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் ராஜேஷ் (32) களப்பணியாளராக பணியாற்றி வந்துள்ளாா். இவா், நிதிநிறுவனத்தில் கடன்பெற்ற வாகன வாடிக்கையாளா்கள் 75 பேரிடம் 2021-ஆம் ஆண்டில் வசூல் செய்த ரூ. 6.70 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளாா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக அலுவலகம் சரிவர இயங்காததால் இவரது பண மோசடி குறித்து ஓராண்டுக்குப் பிறகு தணிக்கை செய்யும்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, குற்றப்பிரிவு போலீஸாரிடம் 2022-ஆம் ஆண்டு மே மாதம் 16-ஆம் தேதி புகாா் அளிக்கப்பட்டது. இதற்கிடையே ராஜேஷ் தலைமறைவானாா்.
இதுகுறித்து, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அன்னக்கொடி விசாரணை மேற்கொண்டாா். இந்நிலையில், ராஜேஷ் அவரது சொந்த ஊருக்கு வந்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற குற்றப்பிரிவு போலீஸாா் ராஜேஷை கைது செய்து, மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.