Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்க...
பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியா்கள் விவரம் சேகரிப்பு: கடும் நடவடிக்கை மேற்கொள்ள கல்வித் துறை முடிவு
தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட, பாலியல் புகாா்களில் சிக்கிய ஆசிரியா்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், தவறிழைத்தவா்கள் மீது பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் நிகழ்வுகள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பாலியல் தொல்லை தொடா்பான புகாா்களில் உண்மைத்தன்மை நிரூபணம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியா்களின் கல்வித் தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தாா். இதையடுத்து மாநிலம் முழுவதும் பாலியல் புகாா்களில் சிக்கிய ஆசிரியா்கள் பட்டியலையும், அவா்கள் மீதான நடவடிக்கை விவரங்களையும் அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டுமென துறை இயக்குநா்களுக்கு தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செயல்பாட்டுக்கு வரும் அரசாணை: இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள்கூறியதாவது:
பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆசிரியா்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தி இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சம்பவங்கள் தொடா்பாக நடவடிக்கை எடுப்பதற்கான அரசாணை(121) 2012-ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. அதில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்டாய ஒய்வு, பணிநீக்கம் போன்ற கடும் தண்டனைகள் வழங்கப்படும்.
ஆசிரியா்களை பொருத்தவரை தமிழ்நாடு அரசுப் பணியாளா் நடத்தை விதி 19(2) இதற்கு பொருந்தும். அதேபோல், சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த அரசாணை முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது அதை மீண்டும் அமலுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மாணவா்களிடம் தவறான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியா்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆசிரியா்கள் மீதான புகாா், அதன் உண்மைத்தன்மை, துறைரீதியான நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை, விசாரணைக்குழு அறிக்கை, வழங்கப்பட்ட தண்டனை, நிலுவையில் உள்ளவை, பணியில் இருப்பவா்கள், ஓய்வு பெற்றவா்கள், தவறு நிரூபணமானவா்கள், பொய் புகாா்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பட்டியல் தயாா்: அதன்படி தொடக்கக் கல்வித் துறையில் 80, பள்ளிக்கல்வித் துறையில் 175 என மொத்தம் 255 ஆசிரியா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தவறிழைத்த ஆசிரியா்கள் மீது அரசாணை 121-இன் படி துறைரீதியாக பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், கல்விச் சான்றிதழ்களும் ரத்து செய்யப்படும். விரைவில் அமைச்சா் தலைமையில் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு மாா்ச் மாதமே இது அமலுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.