TVK: திருச்சி வந்த தவெக தலைவர்; பிரசார களத்துக்கு செல்வதில் சிக்கல்! - என்ன நடக்...
பாலில் நீர் ஊற்றினால், ஈரலை அலசினால் வைட்டமின் B12 வீணாகிவிடுமா?
செல்போனை எந்த நேரத்தில் ஓப்பன் செய்தாலும், வைட்டமின் பி 12 குறைபாடு, அதன் அறிகுறிகள், தீர்வுகள் என ரீல்ஸாக கொட்டுகிறது.
பி 12 வைட்டமின் நீரில் கரையக்கூடிய வைட்டமின். அப்படியென்றால், பி 12 நிறைந்த பாலில் தண்ணீர் கலந்தாலோ, ஆட்டு ஈரலை நீரில் அலசினாலோ அவற்றில் இருக்கிற வைட்டமின் கரைந்து போய்விடாதா? சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நோய் நிபுணர் பாசுமணி அவர்களிடம் கேட்டோம்.

’’வைட்டமின் ஏ.டி.ஈ. மற்றும் கே ஆகிய நான்கும் கொழுப்பில் கரையக்கூடியவை. நம் உடலின் செல்களில், செல்களின் சுவர்களில் கொழுப்பு இருக்கிறது.
இதனால், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை நம்முடைய உடம்பு அதிகமாகச் சேர்த்து வைக்கக்கூட வாய்ப்பிருக்கிறது.
இதன் விளைவாக, உடலில் நச்சுத்தன்மை அதிகமாகி மூளையில் அழுத்தம் அதிகமாகி, கண் பார்வை பாதிக்கப்படலாம்; தோல் வறண்டு போகலாம்.
உடலுக்கு அதிமுக்கியமான வைட்டமின்கள்கூட அளவுக்கு மீறினால் பிரச்னை தருவதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.
அதனால்தான், இந்த வகை வைட்டமின் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையைப் பெற்று சாப்பிட வேண்டும் என்கிறோம்.
ஆனால், பி 12 போல நீரில் கரையும் வைட்டமின்கள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகத் தங்கி விஷத்தன்மையை ஏற்படுத்தாது.

பாலில் அதிகமாகத் தண்ணீர் சேர்ப்பதாலோ அல்லது ஈரலை நீரில் சுத்தம் செய்வதாலோ பி 12 வீணாகாது. ஏனென்றால், இந்த வைட்டமின் பால் மற்றும் ஈரலின் ஒவ்வொரு செல்களிலும் பொதிந்திருக்கிறது.
அதனால், பி 12 எப்படியும் நம் உடலுக்குள் சென்றுவிடும். நம்முடைய உடல்தான், அது அதிகமாகும்போது உடலில் இருக்கிற நீரில் கரைத்து வெளியேற்றிவிடும்.
நீங்கள் பி 12 ஊசி போட்டுக்கொள்கிறீர்கள் என்றால், அதன் வீரியம் உங்கள் உடலில் எத்தனை காலம் இருக்கிறது என்பதைப் பொறுத்து மாதத்துக்கு ஓர் ஊசியோ அல்லது மூன்று மாதத்துக்கு ஓர் ஊசியோ போட்டுக்கொள்ளலாம். பி 12-ஐ மாத்திரையாக எடுத்துக்கொண்டீர்கள் என்றால், அது மல்ட்டி வைட்டமின் மாத்திரையிலோ அல்லது பி காம்ப்ளெக்ஸ் மாத்திரையிலோ கலந்துதான் வரும். அதனால், பி 12 மாத்திரையை நீண்ட காலம் சாப்பிடுபவர்கள், வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு போட்டுக்கொண்டாலே போதும். ஊசியாகப் போட்டுக்கொள்ளும்போது, பி 12 நிச்சயம் உடலில் சேர்ந்துவிடும். மாத்திரையாகப் போடும்போதும் உடலில் சேர்ந்துவிடும் என்றாலும், பி 12 குறைபாட்டின் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், ஒருமுறை இதற்கான இரத்தப் பரிசோதனை செய்து பார்க்கலாம்.
பி12 வைட்டமினை ஊசியாக எடுத்துக்கொண்டாலும் சரி, மாத்திரையாக எடுத்துக்கொண்டாலும் சரி, ஓவர் டோஸ் ஆவதற்கு வாய்ப்பில்லை. உடல் அது தேவைக்கு உறிஞ்சியதுபோக, மீதத்தைச் சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும்’’ என்கிறார் டாக்டர் பாசுமணி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...