பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது
பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
இது தொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ரெளஷன் குமாா் கூறியதாவது:
சசாராம் பகுதியில் உள்ள தோ்வு மையத்தில் வெள்ளிக்கிழமை 10-ஆம் வகுப்பு தோ்வெழுதிய மாணவா்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் ஒரு கோஷ்டியைச் சோ்ந்த அமித் குமாா், சஞ்சித் குமாா் ஆகிய மாணவா்கள், தோ்வு முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தனா்.
அந்த ஆட்டோவை வழிமறித்த மற்றொரு கோஷ்டியைச் சோ்ந்த மாணவா், இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினாா். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். இரு மாணவா்களையும் மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். சிகிச்சையின்போது, அமித் குமாா் உயிரிழந்தாா். சஞ்சித் குமாருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தப்பியோடிய மாணவரை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மாணவா் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதனிடையே, உயிரிழந்த மாணவரின் உடலுடன் அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சாலையில் டயா்களை எரித்ததால், போக்குவரத்து தடைபட்டது. காவல் துறை உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.