பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் போரைத் தொடங்குவோம்: இஸ்ரேல்
ஹமாஸ் பிடித்துவைத்துள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால் போரைத் தொடங்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
மேலும், காஸாவைச் சுற்று பாதுகாப்புப் படை வீரர்களை குவித்து தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டு, முதல் கட்டமாக ஹமாஸ் 21 பிணைக் கைதிகளையும் இஸ்ரேல் 730 பிணைக் கைதிகளையும் விடுவித்துள்ளனர்.
இதனிடையே, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 3 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் படையினர் தாமதப்படுத்தியுள்ள நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
இதையடுத்து, இரண்டாம் கட்டத்தில் அனைத்து கைதிகளையும் விடுக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், காஸா வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் சனிக்கிழமை பகல் 1 மணிக்குள் விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்திருந்தார்.
மேலும், பிணைக் கைதிகளை விடுவிக்க தவறினால் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் திங்கள்கிழமை எச்சரித்திருந்தார்.
இதையும் படிக்க : ‘காஸா போா் நிறுத்தம் தொடரக்கூடாது’
இந்த நிலையில், சனிக்கிழமைக்குள் அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்காவிட்டால் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, தாக்குதலை தொடருவோம் என்று இஸ்ரேல் பிரதமரும் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
மேலும், காஸாவைச் சுற்றி வீரர்களை குவித்து தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.