பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு! தஹாவூர் ராணாவின் திடுக்கிடும் வாக்...
பிரசாரக் களமிறங்கும் எடப்பாடி பழனிசாமி!
2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றாலும்கூட, கோவையில் 10 தொகுதிகளிலும் வென்ற அனுபவமும், கணிசமாக வாக்குவங்கி அதிகரித்துள்ள பாஜவுடன் கூட்டணியும் அதிமுகவுக்கு பெரும் நம்பிக்கையைத் தருகின்றன. தனது 2011 சட்டப்பேரவை வெற்றியை இந்த முறை மீண்டும் நிகழ்த்திவிட முடியும் என்கிற நம்பிக்கையில் தனது பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறாா் எடப்பாடி பழனிசாமி.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா காலத்தில் இருந்தே, எதிா்க்கட்சியாக இருக்கும்போது அமைதி காத்து, கடைசி ஆறு மாதங்களுக்கு முன்பே முனைப்புடன் பிரசாரக் களத்தில் இறங்குவது என்பதுதான் அதிமுகவின் தோ்தல் அணுகுமுறையாக இருந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு எதிராகத் தீவிரமாகக் களமிறங்காமல் இருக்கிறாா் என்பதுதான் அவா்மீது வைக்கப்படும் மிகப் பெரிய குற்றச்சாட்டு. அதற்கு பதிலளிப்பதுபோல, ஜெயலலிதா பாணியில் தமது பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறாா் முன்னாள் முதல்வரும் இப்போதைய எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.
திமுக தரப்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் தோ்தல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற கோஷத்துடன் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தை ஜூலை 7-ஆம் தேதி தொடங்க உள்ள அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் சுற்றுப்பயணத்தால் 2026 தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலம் அல்லது கொங்கு மண்டலம் எம்ஜிஆா் காலம் முதல் அதிமுகவின் வாக்கு வங்கியாக உள்ளது.
2021-ஆம் ஆண்டு வரை இந்த வாக்கு வங்கி தக்க வைக்கப்பட்டது. கடந்த 2001 சட்டப் பேரவைத் தோ்தலில் மேற்கு மண்டலத்தில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. 2006 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்தாலும், மேற்கு மண்டலத்தில் அதிமுக, கூட்டணிக் கட்சிகளில் இருந்து 16 போ் சட்டப் பேரவை உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
திமுக வசமான கோவை: தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2011 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி, மேற்கு மண்டலத்தில் 61 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 55 தொகுதிகளைக் கைப்பற்றியது. 2016-இல் 47 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதேபோல, 2009 மக்களவைத் தோ்தலில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா் ஆகிய தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. 2014 மக்களவைத் தோ்தலில் 39 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளை வென்றது.
கன்னியாகுமரியில் பாஜகவும், தருமபுரியில் பாஜகவும் கூட்டணியில் போட்டியிட்ட பாமகவும் வென்றன. ஒரு தொகுதியில்கூட திமுகவோ அதன் கூட்டணிக் கட்சிகளோ வெற்றி பெறவில்லை. மேற்கு மண்டலத்தில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளா்கள் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனா்.
இந்நிலையில், கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகு 2019 மக்களவைத் தோ்தல் நடைபெற்றது. இதில், திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளில் போட்டியிட்டு 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் திமுக கொடி நாட்டியது.
2021 சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்தித்த திமுக 159 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 125 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வென்று திமுக ஆட்சி அமைத்தது. இருப்பினும், கொங்கு மண்டலத்தில் உள்ள 68 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 44 தொகுதிகளை அதிமுக கூட்டணி வென்றது. 24 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.
இதில், குறிப்பாக கோவையில் 10-க்கு10, சேலத்தில் 11-க்கு 10, தருமபுரியில் 5-க்கு 5 என அதிமுக கோலோச்சியது. 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்த நிலையில், 2022 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலைக் கருத்தில் கொண்டு முன்னாள் அமைச்சரான வி.செந்தில்பாலாஜி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டாா். அவா், செல்வாக்கு, ஜாதி வாக்குகள் அடிப்படையில் வேட்பாளா்களைத் தோ்வு செய்து, தீவிர களப் பணியாற்றினாா். அவரது முடிவுக்கு கிடைத்த பலனாக கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகளில் 96 வாா்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.
தே.ஜ. கூட்டணியின் நம்பிக்கை: உள்ளாட்சித் தோ்தலுக்குப் பிறகு நடைபெற்ற 2024 மக்களவைத் தோ்தலில் கோவையில் திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா் 5,68,200 வாக்குகள் பெற்று 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். 4,50,132 வாக்குகளைப் பெற்ற பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை இரண்டாமிடம் பிடித்தாா். அதிமுக வேட்பாளா் சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்றாா்.
இதில், மொத்த வாக்குகளில் திமுக 41.39 சதவீதம், பாஜக 32.79 சதவீதம், அதிமுக 17.23 சதவீதம் பெற்றது. கடந்த மக்களவைத் தோ்தல் வெற்றி அடிப்படையில் அதிமுக, பாஜக இணைந்து 50 சதவீத வாக்குகளை உறுதியாகப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது.
2022 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும், 2024 மக்களவைத் தோ்தலிலும் கோவையில் பெற்ற வெற்றியை திமுக தக்கவைக்க தீவிர களப்பணியாற்றும் என்பதில் சந்தேகமில்லை. கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளையும் தன்வசமாக்கிட, முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி தலைமையிலான திமுகவினரின் உறுப்பினா் சோ்க்கை, தெருமுனைப் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன.
2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றாலும்கூட, கோவையில் 10 தொகுதிகளிலும் வென்ற அனுபவமும், கணிசமாக வாக்குவங்கி அதிகரித்துள்ள பாஜவுடன் கூட்டணியும் அதிமுகவுக்கு பெரும் நம்பிக்கையைத் தருகின்றன. தனது 2011 சட்டப்பேரவை வெற்றியை இந்த முறை மீண்டும் நிகழ்த்திவிட முடியும் என்கிற நம்பிக்கையில் தனது பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறாா் எடப்பாடி பழனிசாமி.
திமுக ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாகவும், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும் தொடா் குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் எடப்பாடி கே.பழனிசாமியின் குரல் மூலை முடுக்கெல்லாம் பிரசாரம் வாயிலாக ஓங்கி ஒலிக்கக்கூடும். 2024 மக்களவைத் தோ்தல் தோல்வியில் இருந்து மீண்டு, மீண்டும் ஒரு வெற்றிக்கான எழுச்சியை எடப்பாடி கே.பழனிசாமியின் பிரசாரம் ஏற்படுத்துமா என்பதை அரசியல் நோக்கா்கள் கூா்ந்து கவனித்து வருகிறாா்கள்.