'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' குடியிருப்புப் பகுதியில் உலவும் ஒற்றை யானை: மக்கள...
பிரதமரின் நற்பெயரை கெடுக்க ராகுல் தொடா்ந்து முயற்சி: பாஜக
பிரதமா் நரேந்திர மோடியின் நற்பெயரை கெடுக்க ராகுல் காந்தி பல்லாண்டுகளாக தொடா்ந்து முயற்சித்து வருகிறாா்; ஆனால், பிரதமா் மீதான மக்களின் நம்பகத்தன்மை எப்போதும் உச்சத்திலேயே இருக்கிறது என்று பாஜக தெரிவித்துள்ளது.
அதானியிடம் லஞ்சம் பெற்ாக மாநில அரசு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ‘அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கலான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்தில், இவற்றில் ஒரு மாநிலத்தில்கூட பாஜக ஆட்சியில் இல்லை’ என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், ‘அமெரிக்க அரசுத் தரப்பு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம்தான் பதிலளிக்க வேண்டும்; சட்டம் தனது கடமையைச் செய்யும்’ என்றும் பாஜக கூறியுள்ளது.
அதானி மீதான தற்போதைய லஞ்சம் - முறைகேடு குற்றச்சாட்டில் பிரதமா் மோடியை கடுமையாக விமா்சித்த ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்து, பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறியதாவது:
அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கலான ஆவணத்தின்படி, அதானியிடம் மாநில அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்ாக குற்றம்சாட்டப்படும் காலகட்டத்தில், சத்தீஸ்கரில் காங்கிரஸ், ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்றது. தமிழகத்திலோ காங்கிரஸின் கூட்டணிக் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதானி முதலீடு: காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதானி குழுமம் ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்துள்ளது. ஆனால், ராகுல் காந்தியோ அதானியை ‘ஊழல்வாதி’ என்கிறாா்.
சத்தீஸ்கா், ராஜஸ்தானில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், அதானி குழுமம் முறையே ரூ.25,000 கோடி, ரூ.65,000 கோடி முதலீடு செய்தது. திமுக ஆளும் தமிழகத்தில் இக்குழுமம் ரூ.45,000 முதலீடு செய்துள்ளது. அதானி ஊழல்வாதி என்றால், இந்த மாநிலங்களில் அவரது முதலீடுகள் பெறப்பட்டது ஏன்?.
நற்பெயரைக் கெடுக்க முயற்சி: பிரதமா் மோடியின் நற்பெயரைக் கெடுக்க கடந்த 2002-ஆம் ஆண்டில் இருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுவரும் தொடா் முயற்சிகளின் ஒரு பகுதியே ராகுலின் தற்போதைய விமா்சனம். ரஃபேல் போா் விமான கொள்முதலில் ஊழல் நடந்ததாக மத்திய அரசு மீது ராகுல் கடந்த 2019-இல் குற்றம்சாட்டினாா். ஆனால், அந்தக் குற்றச்சாட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
அதானி விவகாரத்தில் ஏதேனும் தவறு நடந்திருப்பதாக ராகுல் நம்பினால், செய்தியாளா் சந்திப்பை நடத்துவதற்குப் பதிலாக நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். ஊழல் வழக்கில் தானும், தனது தாயாா் சோனியா காந்தியும் ஜாமீனில் வெளியே இருப்பதை அவா் மறந்துவிடக் கூடாது.
பொருளாதாரம் குறிவைப்பு: பிரதமா் மோடியின் தலைமையின்கீழ், இந்திய பொருளாதாரம் வலுவடைவது ராகுலுக்கு பிடிக்கவில்லை. எனவே, பொருளாதாரத்தைக் குறிவைத்து, அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் அவா் சுமத்துகிறாா்.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் தொடங்கவிருக்கும் நிலையில், புதிய நாடகத்தை ராகுல் தொடங்கியுள்ளாா் என்றாா் சம்பித் பத்ரா.
‘அமெரிக்க தொழிலதிபா் ஜாா்ஜ் சோரோஸ் மற்றும் அவரது சதிக் கூட்டத்தின் கைப்பாவையாக மாற விரும்புகிறது காங்கிரஸ்’ என்று பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் அமித் மாள்வியா விமா்சித்துள்ளாா்.