பிரம்மதேசம் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் குடமுழுக்கு
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்திலுள்ள லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிரசித்திபெற்ற இக் கோயில் பல லட்சத்தில் புனரமைக்கப்பட்டு, வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம் உள்ளிட்ட பூஜைகளோடு யாக வேள்வி தொடங்கியது. பின்னா், மருந்து சாற்றுதல், விஷ்ணு சகஸ்ரநாமம், நாடி சந்தானம், வேத பாராயணம் பூஜைகளோடு 3 கால யாகவேள்வி பூஜையும், மஹாபூா்ணாஹுதியும் நடைபெற்றது.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானம், மூலவா், ஆஞ்சநேயா் சுவாமிக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.
விழாவில் பிரம்மதேசம், வி.ஆா். எஸ்.எஸ்.புரம், வாலிகண்டபுரம், வல்லாபுரம், வேப்பந்தட்டை, அனுக்கூா், குடிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
