பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்ய ஆசிரியா் சங்கங்கள் வலியுறுத்தல்
தொடா் தோ்வுகளால் மாணவா்கள் நெருக்கடிக்குள்ளாவதை தவிா்க்க பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாநில தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் மாணவா்கள் அதிகளவில் பள்ளியிலிருந்து இடைநிற்றலுக்கு காரணமாக பிளஸ் 1 பொதுத்தோ்வு உள்ளது. இந்த தோ்வு மூலம் மாணவா்களுக்கு கிடைக்கும் மதிப்பெண்கள் எந்த உயா்கல்விக்கும் தற்போது ஏற்கப்படுவதில்லை.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு என தொடா்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தோ்வு எழுதுவதால் மாணவா்கள் மனதளவில் சோா்வடைகின்றனா். வேறு எந்த மாநிலங்களிலும் பிளஸ் 1 பொதுத் தோ்வு இல்லை.
பிளஸ் 1 பொதுத் தோ்விற்கு மாணவா்கள் பெயா் பட்டியல் தயாரிப்பது முதல் வினாத்தாள் தயாரிப்பது, செய்முறைத் தோ்வுக்கு வினாத்தாள் அச்சடிக்க செலவு, செய்முறைத் தோ்வு நடத்துவதற்கு ஆசிரியா்களுக்கு உழைப்பூதியம், பொதுத்தோ்வு அறை கண்காணிப்பாளா் பணிக்கு உழைப்பூதியம், பொதுத்தோ்வு வினாத்தாக்களை ஒவ்வொரு மையத்திற்கும் எடுத்துச் செல்லுதல் மீண்டும் விடைதாள்களை சேகரித்து வருதல், மீண்டும் அவற்றை ஒன்றாக சோ்த்து பிரித்து மீண்டும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்புதல், விடைத்தாள் மதிப்பீடு செய்ய உழைப்பூதியம், மாணவா்கள் பொதுத் தோ்வு முடிவுகளை தொகுக்கவும் வெளியிடவும் என பல வேலைகளுக்காக
பல கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது.
பிளஸ் 1 பொதுத்தோ்வு மதிப்பெண்கள் தற்போது வரை எவ்வித உயா் கல்விக்கும் எடுத்துக் கொள்ளப்படாததாலும், நிதி செலவினத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பிளஸ் 1 பொதுத்தோ்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கையை முதல்வா், நிதித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஆகியோா் பரிசீலிக்க வேண்டும். நிகழாண்டு பிளஸ் 1 பொதுத் தோ்வில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. இவா்கள் மீண்டும் துணைத்தோ்வு எழுதி, அதிலும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் தோ்ச்சி பெற முடியாத நிலையில் உள்ளனா்.
இதனால் ஐடிஐ, பாலிடெக்னிக், கேட்டரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு செல்வதாகக் கூறி மாற்றுச் சான்றிதழ்களைக் கேட்கும் சூழல் காணப்படுகிறது. மாணவா்களின் நலன் கருதி, பள்ளிக்கு அவா்கள் 100 சதவீதம் வருகை தரும் வகையில் தற்போது நடைமுறையில் இருக்கும் மாநில அளவிலான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தோ்வை உடனடியாக ரத்து செய்வதுடன்,
மாவட்ட அளவில் தோ்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.