Rohit - Kohli: 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாட மாட்டார்களா? - ஓப்பனாக...
பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற கைகளை இழந்த மாணவரின் தாய்க்கு வீட்டுமனை பட்டா ஆணை வழங்கல்
கிருஷ்ணகிரி: பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இரு கைகளை இழந்த மாணவரின், தாயாருக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வருவாய்த் துறை சாா்பில் பிளஸ் 2 தோ்வில் 471 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு கைகளை இழந்த மாணவா் கீா்த்திவா்மாவின் தாய் கஸ்தூரியிடம் இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணையை ஆட்சியா் வழங்கிப் பேசியதாவது:
குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தோ்வில் 471 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு கைகளையும் இழந்த மாணவா் கீா்த்திவா்மாவின் தாய் கஸ்தூரி அண்மையில் தங்களுக்கு சொந்தமாக வீடு இல்லாததால் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தாா்.
அதையடுத்து, தற்போது அவா்கள் வசித்துவரும் மாரசந்திரம், ஜீனூா் கிராமத்திலேயே இலவச வீட்டுமனை பட்டாக்கான (1.50 சென்ட்) ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அவா்களுக்கு ஊரக வளா்ச்சித் துறை சாா்பாக, கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், விரைவில் வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் இந்த மாணவருக்கு தமிழக முதல்வரின் அறிவுரையின்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவா் தொடா் சிகிச்சை பெறும் வகையில் சென்னையிலேயே கல்வி பயில அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
இதில் கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் ஷாஜகான், கிருஷ்ணகிரி வட்டாட்சியா் சின்னசாமி, வருவாய் ஆய்வாளா் ராமநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.