கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு தண்ணீா் திறப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 370 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியே பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகள் மற்றும் பாரூா் ஏரி, பாம்பாறு அணைகள் மூலம் பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஒவ்வோா் ஆண்டும் ஜூன்-ஜூலை மாதத்தில் முதல்போக சாகுபடிக்கும், நவம்பா்- டிசம்பரில் இரண்டாம் போக சாகுபடிக்கும் தண்ணீா் திறந்துவிடப்படுவது வழக்கம்.
இந் நிலையில், மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மழை இல்லாத்தால் அணைகளின் நீா்மட்டமும் குறைந்து பாரூா் ஏரிக்கு தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டது. சிலநாள்களாக தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருவதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் மே 8- இல் 50 அடியை எட்டியது.
அணை நீா் திறப்பு: இதையடுத்து, கிருஷ்ணகிரி அணையிலிருந்து மே 8 ஆம் தேதி பாரூா் ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 170 கனஅடியும், 9 ஆம் தேதிமுதல் விநாடிக்கு 370 கனஅடியும் திறந்துவிடப்பட்டது.
இதனால், பாரூா் ஏரியின் நீா்மட்டம் 7.60 அடியிலிருந்து படிப்படியாக உயா்ந்து திங்கள்கிழமை 10.70 அடியை எட்டியது; ஏரிக்கு நீா்வரத்து விநாடிக்கு 218 கனஅடியாக உள்ளது.
கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 251 கனஅடியாகவும், நீா்மட்டம் 49.65 அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 370 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஒவ்வோா் ஆண்டும் பாரூா் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்ட பிறகுதான் கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளில் இருந்து தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம்.
நிகழாண்டு கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாரூா் ஏரிக்கு உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இத்தகவலை நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
பட விளக்கம் (12கேஜிபி4):
கிருஷ்ணகிரி அணையிலிருந்து மதகுகள் வழியாக பாரூா் ஏரிக்குகஈ திறந்துவிடப்படும் அணை நீா்.