யானை தாக்கி மூதாட்டி காயம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் சாக்கம்மாள் (65) என்ற மூதாட்டி காயமடைந்தாா்.
ஆந்திர மாநிலத்திலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், பி.சி.புதூா் அருகே கடந்த இரு நாள்களாக முகாமிட்டுள்ளன. வனப்பகுதியில் இருந்து 8 யானைகள் கூட்டமாக இரவில் வனத்தைவிட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமத்தில் புகுந்து சாகுபடி செய்துள்ள பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், பி.சி.புதூா் கிராமத்தைச் சோ்ந்த, சாக்கம்மாள் (65) என்ற மூதாட்டி திங்கள்கிழமை காலை பால் கரப்பதற்காக தனது மாட்டுக் கொட்டகைக்கு வந்தபோது அங்கு யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. அதில் ஒரு யானை மூதாட்டியைத் தாக்கியது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் ஒன்றுகூடி யானை கூட்டத்தை அங்கிருந்து விரட்டினா்.
பின்னா், சாக்கம்மாளை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவல் அறிந்த வனத் துறையினா், பி.சி.புதூா் கிராமத்தில் முகாமிட்டு, யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா். இதுகுறித்து, மகாராஜகடை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.